நார்வே செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவிற்கு மு.க.ஸ்டாலின், தமிழிசை வாழ்த்து
- நார்வே செஸ் தொடரில் வென்று மீண்டும் இந்தியாவுக்கே அவர் புகழ் சேர்த்துள்ளார்
- இன்னும் பல உலக சாதனை படைத்து இந்திய மண்ணிற்கு பெருமை சேர்க்க வாழ்த்து
நார்வேயில் நடைபெற்ற குரூப் ஏ ஓபன் செஸ் போட்டித் தொடரில் தமிழகத்தை சேர்ந்த இந்திய இளம்வீரர் பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்றார். மொத்தம் 9 சுற்றுக்கள் நடைபெற்ற இந்த போட்டியில் 6 போட்டிகளில் வெற்றி, 3 போட்டிகளில் டிரா என 7.5 புள்ளிகள் பெற்று பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.
இதனையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரக்ஞானந்தாவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமது டுவிட்டர் பதிவில் அவர் தெரிவித்துள்ளதாவது:
சில மாத இடைவெளியில் உலகின் நம்பர் 1 வீரரான மேக்னஸ் கார்ல்சனை இரு முறை வீழ்த்தி, உலகை வியப்பில் ஆழ்த்திய நம் சென்னைச் சிறுவன் பிரக்ஞானந்தா, தற்போது நார்வே செஸ் தொடரில் வென்று மீண்டும் இந்தியாவுக்கே புகழ் சேர்த்துள்ளார். வெற்றிகளும் புகழ்மாலைகளும் மென்மேலும் குவியட்டும்
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இது போல் தெலுங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் டாக்டர் திருமதி.தமிழிசை சௌந்தரராஜன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,
நார்வே செஸ் குரூப் ஏ ஓபன் செஸ் தொடரில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்று தமிழ்நாட்டிற்கும் நம் இந்திய மண்ணிற்கும் பெருமை சேர்த்த செஸ் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவிற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். இன்னும் பல உலக சாதனை படைத்து இந்திய மண்ணிற்கு பெருமை சேர்க்க எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.