பணம் கொடுக்கல் - வாங்கல் பிரச்சினை வாலிபர் வெட்டிக்கொலை 2 பேர் மீது வழக்கு
- கொடுக்கல், வாங்கல் தொடர்பாக முன்விரோதம் இருந்தது வந்தது.
- அச்சரம்பட்டு கிராமத்திற்கு நேற்று மாலை வந்தார்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகேயுள்ள அச்சரம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் முரளிதாஸ் (வயது 32). இவருக்கும் பிரம்மதேசம் அடுத்த பழமுக்கலை சேர்ந்த பாபுவிற்கும் (38) இடையே பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக முன்விரோதம் இருந்தது வந்தது. இந்நிலையில் முரளி தாசை சந்திக்க பாபு தனது நண்ப ரை அழைத்துக் கொண்டு அச்சரம்பட்டு கிராமத்திற்கு நேற்று மாலை வந்தார்.
அப்போது முரளிதாஸ் ஏரிக்கரை அருகே மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். அங்கு வந்த பாபு, முரளிதாசிடம் பணம் கேட்டுள்ளார். இதில் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இது கைகலப்பாக மாறி ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். அப்போது பாபு, தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து முரளிதாசின் வலது காலில் வெட்டினார். இதனால் பலத்த காயமடைந்த முரளிதாஸ், கீழே விழுந்து கூச்சலிட்டு கதறினார். இதனைப் பார்த்த பாபு, தனது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் தப்பியோடினார். அங்கு விவசாய பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் முரளிதாசை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு முரளிதாசிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், கத்தியால் வெட்டப்பட்ட காலில் இருந்து ரத்தம் நிற்கவில்லை. இந்நிலையில் முரளி தாஸ் இன்று காலை சிகிச்சை பலனின்றி இறந்தார். இது தொடர்பான புகாரின் பேரில் ஆரோவில் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். முரளிதாசை கத்தியால் வெட்டிவிட்டு தப்பியோடிய பாபு மற்றும் அவரது நண்பரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் வானூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.