தனியார் பள்ளிகளுக்கு இணையாக மாநகராட்சி பள்ளி வகுப்பறை- கலாநிதி வீராசாமி எம்.பி. திறந்து வைத்தார்
- ரூ. 1.90 கோடி மதிப்பீட்டில். 2 மாடியில் 6 வகுப்பறை கட்டிடங்கள் நவீன வசதியுடன் கட்டப்பட்டது.
- மாணவர்கள் அமர்ந்து படிக்க நவீன மேஜை நாற்காலிகள் பிரத்தியேகமாக அமைக்கப்பட்டுள்ளன.
திருவொற்றியூர்:
மணலி, பாடசாலை தெருவில் சென்னை மாநகராட்சி தொடக்கப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் போதிய வகுப்பறை வசதிகள் இல்லாததால் கூடுதல் வகுப்பறைகள் கட்டித் தர வேண்டும் என்று ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் வட சென்னை எம்.பி. கலாநிதி வீராசாமியிடம் கோரிக்கை வைத்தனர்.
இதைத்தொடர்ந்து தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 1.90 கோடி மதிப்பீட்டில். 2 மாடியில் 6 வகுப்பறை கட்டிடங்கள் நவீன வசதியுடன் கட்டப்பட்டது. மாணவர்களை பெரிதும் கவரும் வகையில் பல வண்ணங்களில் விமானம், வந்தே பாரத் ரெயில், இஸ்ரோ ராக்கெட் என வகுப்பறைமுகப்புகளில் வரையப்பட்டு தனியார் பள்ளிகளை மிஞ்சும் வகையில் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
மேலும் மாணவர்கள் அமர்ந்து படிக்க நவீன மேஜை நாற்காலிகள் பிரத்தியேகமாக அமைக்கப்பட்டுள்ளன. இதனை மாணவர்கள் பயன்பாட்டிற்காக டாக்டர் கலாநிதி வீராசாமி எம்.பி. திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் மாதவரம் சுதர்சனம், கே.பி.சங்கர், மண்டல குழு தலைவர் ஏ.வி. ஆறுமுகம், வடக்கு மண்டல துணை ஆணையர் சிவகுரு பிரபாகரன், தலைமை ஆசிரியர் கோமளீஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.