உள்ளூர் செய்திகள்

பக்ரீத் பண்டிகையையொட்டி தருமபுரி, கிருஷ்ணகிரியில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை

Published On 2023-06-29 09:33 GMT   |   Update On 2023-06-29 09:33 GMT
  • தருமபுரி நகரில் உள்ள ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் புத்தாடை அணிந்து பங்கேற்று சிறப்பு தொழுகை நடத்தினர்.
  • ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி பக்ரீத் பண்டிகை வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர்.

தருமபுரி,

தருமபுரியில் பக்ரீத் பண்டிகையையொட்டி நடைபெற்ற சிறப்பு தொழுகையில் ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்டு கலந்து கொண்டனர்.

முஸ்லிம்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத் பண்டிகை இன்று நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி ஆங்காங்கே உள்ள ஈத்கா மைதானம் மற்றும் மசூதிகள், பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

இதில் அந்தந்த பகுதியைச் சேர்ந்த ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்டு சிறப்பு தொழுகை நடத்தினர். பின்னர் ஒருவருக்கொருவர் பக்ரீத் பண்டிகை வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். இந்த தொழுகைக்குப் பின்னர் முஸ்லிம்கள் ஏழைகளுக்கு ஆட்டு இறைச்சி தானமாக வழங்கினர்.

தருமபுரி நகர அனைத்து மசூதிகள் கூட்டமைப்பின் சார்பில் கிருஷ்ணகிரி ரோட்டில் உள்ள ஈத்கா மைதானத்தில் பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை இன்று காலை நடைபெற்றது.

இதில் தருமபுரி நகரில் உள்ள ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் புத்தாடை அணிந்து பங்கேற்று சிறப்பு தொழுகை நடத்தினர். பின்னர் ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி பக்ரீத் பண்டிகை வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர்.

கூட்டமைப்பின் தலைவர் அப்துல் காதர், செயலாளர் இக்பால், மாவட்ட முத்தவல்லிகள் சங்க தலைவர் ஜப்பார், செயலாளர் பாபு, நிர்வாகிகள் முஸ்தாக், ஐ.எஸ்.பாபு, இப்ராகிம், நஜீப், ரிஸ்வான், நசீர் மற்றும் நிர்வாகிகள் இதற்கான ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.

இதேபோன்று பாலக்கோட்டில் உள்ள மசூதிகளில் பக்ரீத் பண்டிகையொட்டி சிறப்பு தொழுகை நடைபெற்றது. இந்த சிறப்புத் தொழுகையில் ஏராளமான முஸ்லிம்கள் புத்தாடையுடன் கலந்து கொண்டனர். இதே போன்று பென்னாகரம் மற்றும் அரூரில் உள்ள மசூதிகளிலும் பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை நடைபெற்றது.இந்த தொழுகையில் ஏராளமான முஸ்லிம்கள் பங்கேற்றனர். பின்னர் ஏழைகளுக்கு குர்பானி கொடுத்தனர்.

இதேபோல் மாவட்டத்தில் உள்ள பாப்பாரப்பட்டி, காரிமங்கலம், மாரண்டஹள்ளி, கம்பைநல்லூர், பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி, கடத்தூர், மொரப்பூர், நல்லம்பள்ளி, தொப்பூர், ஏரியூர் உள்ளிட்ட அனைத்து ஊர்களிலும் பக்ரீத் பண்டிகையையொட்டி மசூதிகள் மற்றும் பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இந்த சிறப்பு தொழுகையை தொடர்ந்து முஸ்லிம்கள் ஏழைகளுக்கு ஆட்டு இறைச்சி உள்ளிட்ட பல்வேறு உதவிகளை வழங்கினர்.

இதே போல் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அனைத்து ஊர்களிலும் பக்ரீத் பண்டிகையையொட்டி மசூதிகள் மற்றும் பள்ளி வாசல்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

Tags:    

Similar News