புதிய இணைப்பு-சந்தா தொகை வசூல் பிரச்சினை - அரசு தீர்வு காண கேபிள் ஆப்ரேட்டர்கள் வலியுறுத்தல்
- அரசு கேபிள் ஆபரேட்டர்கள் தங்கள் கணக்கில் லாக் இன் செய்ய முடியாத நிலை நீடிக்கிறது.
- அரசு கேபிள் டி.வி., நிறுவனம், சந்தா தொகை செலுத்த ஆபரேட்டர்களுக்கு அழுத்தம் கொடுத்துவருகிறது.
திருப்பூர் :
அரசு கேபிள் டி.வி., நிறுவனத்துக்கு மென் பொருள் வழங்கிய நிறுவனம் கடந்த நவம்பர் மாத இறுதியில் திடீரென சேவையை நிறுத்தியது. இதையடுத்து அரசு கேபிள் டி.வி., ஒளிபரப்பு ரத்தானது.கோர்ட்டு உத்தரவையடுத்து தடையின்றி கேபிள் டி.வி., ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. அதேநேரம் அரசு கேபிள் ஆபரேட்டர்கள் தங்கள் கணக்கில் லாக் இன் செய்ய முடியாத நிலை நீடிக்கிறது.
திருப்பூர் மாவட்டத்தில் அரசு கேபிள் டி.வி., ஆபரேட்டர் 659 பேர் உள்ளனர். மொத்தம் 82 ஆயிரம் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. லாக்இன் பிரச்சினை காரணமாக புதிய இணைப்பு வழங்க முடியாமலும், பழுதடைந்த பாக்ஸ்களை வாடிக்கையாளர்களுக்கு மாற்றிக் கொடுக்க முடியாமலும் ஆபரேட்டர்கள் தவிக்கின்றனர்.
இது குறித்து அரசு கேபிள் ஆபரேட்டர்கள் கூறியதாவது:- லாக்இன் பிரச்னையால் புதிய செட்டாப் பாக்ஸ்களை ஆக்டிவேட் செய்ய முடியவில்லை. கடந்த இரண்டு மாதங்களாக புதிதாக அரசு கேபிள் இணைப்பு கேட்போருக்கு வழங்க முடியவில்லை. பழுதான செட்டாப் பாக்ஸ்களையும் மாற்ற முடியாததால் வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைகின்றனர். தனியார் இணைப்புகளை நோக்கி நகர்கின்றனர்.
50சதவீத சந்தாதாரர்கள், ஒளிபரப்பு ரத்தான பின்னரே மாதாந்திர சந்தா தொகை செலுத்துவது வழக்கம். தற்போது தொகை செலுத்தாதோரின் ஒளிபரப்பை ரத்து செய்யமுடிவதில்லை. ஒளிபரப்பு தொடர்வதால் சந்தா தொகை செலுத்த மேலும் இழுத்தடிக்கின்றனர். அரசு கேபிள் டி.வி., நிறுவனம், சந்தா தொகை செலுத்த ஆபரேட்டர்களுக்கு அழுத்தம் கொடுத்துவருகிறது.
வாடிக்கையாளர் பயன்படுத்தாத பாக்ஸ்களையும் செயலிழக்க செய்யமுடியவில்லை. பயன்பாட்டில் இல்லாத பாக்ஸ்களுக்கும் தொகை செலுத்தவேண்டிய நிலை ஏற்படுகிறது. இப்பிரச்சினைக்கு தமிழக அரசு விரைந்து தீர்வு காணவேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.