உள்ளூர் செய்திகள்

புற்றுநோய் சிகிச்சை மையம் கட்ட திருமண மொய் பணம் ரூ.1.91 லட்சத்தை நன்கொடையாக வழங்கிய புதுமண தம்பதி

Published On 2024-09-18 08:52 GMT   |   Update On 2024-09-18 08:52 GMT
  • மணமகன் ஹரிஹரனின் தந்தை மீனாட்சிசுந்தரம், தனது செல்போனில் சமூக வலைதள பதிவவை பார்த்துக் கொண்டிருந்தார்.
  • புதுமணத் தம்பதியினர் தங்களது திருமண நிகழ்ச்சியில் கிடைத்த மொய் பணம் ரூ.1.91 லட்சத்தை புற்றுநோய் சிகிச்சை பிரிவு கட்டிட கட்டுமானத்திற்காக நன்கொடையாக தந்துள்ளனர்.

மதுரை:

தேனி மாவட்டம் ஜக்கம்பட்டியில் சென்னையை சேர்ந்த ஐ.டி. என்ஜினீயர் ஹரிஹரன்-தேன்மொழி ஆகியோருக்கு சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. இந்த திருமண விழாவில் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் மூலம் கிடைத்த திருமண மொய் பணத்தை ஏதாவது ஒரு வகையில் ஏழை மக்களின் உதவிக்காக பயன்படுத்த வேண்டும் என்று இந்த புதுமண தம்பதியினர் திட்டமிட்டனர்.

இந்த நிலையில் மணமகன் ஹரிஹரனின் தந்தை மீனாட்சிசுந்தரம், தனது செல்போனில் சமூக வலைதள பதிவவை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது மதுரையை அடுத்த திருப்பரங்குன்றம் பகுதியை சேர்ந்த ஒரு தனியார் அறக்கட்டளை புற்றுநோயாளிகளை பராமரிப்பதற்கும், சிகிச்சை அளிப்பதற்கும் தனியாக ஒரு மையம் ஏற்படுத்தி வருவதாகவும், அதற்கு தாராள மனம் கொண்ட நன்கொடையாளர்கள் உதவி செய்யும்படியும் அந்த வீடியோவில் அந்த அறக்கட்டளை சேர்ந்த பால் மாணிக்கம் என்பவர் வீடியோ பதிவிட்டு இருந்ததை பார்த்தார்.

இந்த தனியார் அறக்கட்டளையின் நோக்கம் நிறைவேற இந்த புதுமணத் தம்பதியினர் உதவும் வகையில் தங்களது திருமணத்தில் கிடைத்த மொய் பணம் ரூ.1.91 லட்சத்தை இந்த அறக்கட்டளையின் புற்றுநோய் சிகிச்சை மையம் கட்டுவதற்கு உதவியாக வழங்க திட்டமிட்டனர். இதற்காக மீனாட்சி சுந்தரம் மற்றும் புதுமண தம்பதியர் ஹரிஹரன்-தேன்மொழி ஆகியோர் திருப்பரங்குன்றம் வந்து அங்குள்ள தனியார் அறக்கட்டளை நிர்வாகிகளிடம் இந்த தொகையை நன்கொடையாக ஒப்படைத்தனர்.

இது தொடர்பாக அறக்கட்டளை மேலாளர் ரமேஷ் கூறுகையில், புதுமணத் தம்பதியினர் தங்களது திருமண நிகழ்ச்சியில் கிடைத்த மொய் பணம் ரூ.1.91 லட்சத்தை புற்றுநோய் சிகிச்சை பிரிவு கட்டிட கட்டுமானத்திற்காக நன்கொடையாக தந்துள்ளனர். இதை மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டுள்ளோம். இந்த மையம் அமைக்க ரூ.40 லட்சம் செலவாகும் என திட்டமிடப்பட்டுள்ளது.

20 படுக்கைகள் கொண்ட இந்த சிகிச்சை மையத்தில் புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கி சிகிச்சை பெறவும், அவர்களுக்கு தேவையான மறுவாழ்வு பணிகளை செய்ய முடிவு செய்துள்ளோம். இந்த புதிய சிகிச்சை மையம் இன்னும் சில வாரங்களில் தயாராகிவிடும் என்றார்.

திருமணத்திற்கு வந்த மொய் பணத்தை வைத்து எதிர்காலத்திற்கு திட்டமிடும் மணமக்கள் மத்தியில், புற்றுநோய் சிகிச்சை மையம் கட்ட இந்த புதுமணத் தம்பதியின் தன்னலமற்ற சேவையை பலரும் பாராட்டி உள்ளனர்.

Tags:    

Similar News