உள்ளூர் செய்திகள்

 டிராக்டரில் விவசாய நிலத்திற்கு மாட்டு சாணம் ஏற்றிச்சென்ற வாகனத்தை மறித்து சாலையில் கொட்டப்பட்டது.

நல்லம்பள்ளி அருகே பொதுபாதையை ஆக்கிரமிப்பால் மக்கள் தவிப்பு

Published On 2023-03-09 09:51 GMT   |   Update On 2023-03-09 09:51 GMT
  • பொதுமக்கள் பேச்சுவார்த்தை நடத்தியும் ஏற்றுக்கொள்ள மறுத்த நபர் யாருக்கும் பொதுவான வழியாக இல்லை.
  • யாரும் இவ்வழியாக செல்லக்கூடாது என வாகனத்தை தடுத்து நிறுத்தி உள்ளார்.

தொப்பூர்,

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியம் பாகலஹள்ளி ஊராட்சிக்குட்பட்ட குரும்பட்டி முதல் பட்டகபட்டி செல்லும் வழி கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஒருவர் நிதியின் மூலம் அரசு புறம்போக்கு நிலம் மற்றும் பட்டா நிலங்களை சேர்த்து சாலை அமைக்கப்பட்டுள்ளது.

இதில் பட்டா உரிமைதாரர்களிடம் அப்பொழுது ஊராட்சி நிர்வாகத்தின் கீழ் வழங்க அனைவரும் கையெழுத்து போட்டுள்ளனர்.

அதனை தொடர்ந்து 15 ஆண்டு காலமாக பட்டகபட்டி, குரும்பட்டி, ஈச்சம்பட்டி உள்ளிட்ட கிராமத்திற்கு செல்லும் பொது மக்கள் அனைவரும் இந்த மண் சாலையை தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இருதினங்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த சகாதேவன் என்பவர் டிராக்டரில் விவசாய நிலத்திற்கு மாட்டு சாணம் ஏற்றிச்சென்ற வாகனத்தை மறித்து இது எங்களது பட்டா நிலம். இதில் யாரும் வாகனங்களை இயக்க கூடாது. யாரும் இவ்வழியாக செல்லக்கூடாது என வாகனத்தை தடுத்து நிறுத்தி உள்ளார்.

அப்பகுதி அருகாமையில் உள்ள நில உரிமைதாரர்கள் மற்றும் பொதுமக்கள் பேச்சுவார்த்தை நடத்தியும் ஏற்றுக்கொள்ள மறுத்த நபர் யாருக்கும் பொதுவான வழியாக இல்லை.

யாரும் பயன்படுத்தவும் கூடாது. வாகனங்களும் இவ்வழியாக வரக்கூடாது என டிராக்டரில் இருந்த மாட்டு சாணம் லோடு முழுவதையும் சாலையிலேயே கொட்டி விட்ட பின்னர் தான் வண்டியை விட்டுள்ளார்.

தொடர்ந்து மற்ற வாகனங்கள் செல்லக்கூடாது எனவும் மிரட்டி வருவதால் அப்பகுதி பொதுமக்கள் வேறு வழியின்றி பாகலஹள்ளி ஊராட்சி மன்ற அலுவலகம், தொப்பூர் காவல் நிலையம், நல்லம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பொதுப் பாதையை ஆக்கிரமித்து அனைவரையும் மிரட்டி வரும் நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனு அளித்துள்ளனர்.

மேலும் தொடர்ந்து பொதுப்பாதையை ஆக்கிரமிப்பது மட்டுமல்லாமல் மற்ற பொதுமக்களையும் மிரட்டி வரும் நபர் மீது உரிய நடவடிக்கை எடுத்து பொதுப்பாதையை தனி நபர் ஆக்கிரமிக்காத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைக்கின்றனர்.

Tags:    

Similar News