உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

சபரிமலை செல்லும் வாகனங்களுக்கு நாளை முதல் ஒருவழிப்பாதை அமல் -தேனி மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

Published On 2023-11-19 05:23 GMT   |   Update On 2023-11-19 05:23 GMT
  • தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்து அய்யப்பன் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் தேனி மாவட்டம் வழியாக செல்கின்றனர்.
  • நாளை (20ந் தேதி) முதல் சபரிமலையில் மகரஜோதி தரிசன தினம் வரை தேனி மாவட்டம் வழியாக செல்லும் வாகனங்களுக்கு ஒருவழிப்பாதை அமல்படுத்தப்படுகிறது.

தேனி:

சபரிமலை அய்யப்பன் கோவிலில் மகரஜோதி, மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்து அய்யப்பன் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் தேனி மாவட்டம் வழியாக செல்கின்றனர்.

இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே இதனை தவிர்க்கும் விதமாக நாளை முதல் ஒருவழிப்பாதை அமல்படுத்த தேனி மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

சபரிமலை அய்யப்பன் ேகாவிலில் நடைபெறும் மண்டல பூஜையையொட்டி தேனி மாவட்டம் வழியாக சபரிமலைக்கு செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

எனவே போக்குவரத்து இடையூறு, காலதாமதத்தை தவிர்க்கும் வகையில் நாளை (20ந் தேதி) முதல் சபரிமலையில் மகரஜோதி தரிசன தினம் வரை தேனி மாவட்டம் வழியாக செல்லும் வாகனங்களுக்கு ஒருவழிப்பாதை அமல்படுத்தப்படுகிறது.

அதன்படி சபரிமலைக்கு செல்லும் அய்யப்ப பக்தர்களின் வாகனங்கள் கம்பம், கம்பம் மெட்டு வழியாக சபரிமலைக்கு செல்ல வேண்டும். தரிசனம் முடிந்து திரும்பும் பக்தர்கள் வாகனங்கள் குமுளி, கூடலூர், கம்பம் வழியாக செல்லும்மாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து அறிவிப்பு பலகை கம்பத்தில் போலீசார் சார்பில் வைக்கப்பட்டுள்ளது. எனவே அய்யப்ப பக்தர்கள் வாகனங்கள் அதன்படி சென்று வர வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News