உள்ளூர் செய்திகள்

ஊட்டியில் இன்று தொடங்கியது- ரோஜா கண்காட்சியை காண குவிந்த சுற்றுலா பயணிகள்

Published On 2023-05-13 05:53 GMT   |   Update On 2023-05-13 05:53 GMT
  • ஊட்டி ரோஜா பூங்காவில் 18-வது ரோஜா கண்காட்சி இன்று காலை தொடங்கியது.
  • ரோஜா கண்காட்சிக்காக 4500 ரகங்களில் 37 ஆயிரம் ரோஜா செடிகள் வைக்கப்பட்டிருந்தன.

ஊட்டி:

கோடை காலமான ஏப்ரல், மே மாதங்களில் நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் அதிகம் வருவார்கள். அவர்களை மகிழ்விக்கும் வகையில் ஆண்டுதோறும் ஊட்டியில் அரசு துறைகள் சார்பில் கோடை விழா நடத்தப்பட்டு வருகிறது. இதில் மலர் கண்காட்சி, காய்கறி, பழங்கள் கண்காட்சி மட்டுமல்லாமல் சுற்றுலா பயணிகளுக்கு பல்வேறு வகையான போட்டிகளும் நடத்தப்படும்.

இந்த ஆண்டுக்கான கோடை விழா கடந்த 6-ந் தேதி தொடங்கியது. கோத்தகிரி நேரு பூங்காவில் காய்கறி கண்காட்சி 2 நாட்கள் நடந்தது. பல டன் காய்கறிகளை கொண்டு அமைக்கப்பட்டு இருந்த உருவங்கள் சுற்றுலா பயணிகளை கவர்ந்தது. 2 நாள் கண்காட்சியை ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் பார்த்துச் சென்றனர்.

கூடலூரில் வாசனை திரவிய கண்காட்சி நேற்று தொடங்கியது. ஊட்டி படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகளுக்கு படகு போட்டியும் நடத்தப்பட்டது.

இதைத்தொடர்ந்து ஊட்டி ரோஜா பூங்காவில் 18-வது ரோஜா கண்காட்சி இன்று காலை தொடங்கியது. கண்காட்சியை சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார். கலெக்டர் அம்ரித் மற்றும் அதிகாரிகள் பலர் பங்கேற்றனர். இந்த கண்காட்சி இன்று முதல் 3 நாட்கள் நடக்கிறது.

ரோஜா கண்காட்சிக்காக 4500 ரகங்களில் 37 ஆயிரம் ரோஜா செடிகள் வைக்கப்பட்டிருந்தன. பூத்துக்குலுங்கிய பல வண்ண ரோஜா மலர்களை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர். கண்காட்சியில் 27 அடி உயரத்தில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மலர்களை கொண்டு ஈபிள் டவர் அமைக்கப்பட்டு இருந்தது. இந்த ஈபிள் டவர் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. மேலும் கால்பந்து, டென்னிஸ் உள்ளிட்ட விளையாட்டு தொடர்பான உருவ மாதிரிகளும் ரோஜா மலர்களை கொண்டு உருவாக்கப்பட்டு இருந்தது. சிறுவர்கள் குழந்தைகளை கவரும் வண்ணம் யானை, முயல், மயில் போன்ற வடிவங்களும் வடிவமைத்து இருந்தனர்.

தமிழக அரசின் திட்டமான மீண்டும் மஞ்சள் பை திட்டத்தினை அனைவரும் கடைபிடிக்கும் வண்ணம் விழிப்புணர்வு மஞ்சள் பை அலங்காரம், உலக சர்வதேச சிறுதானிய ஆண்டினை கொண்டாடும் வகையில் அதன் சின்னம், இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கும் வண்ணம் கோ ஆர்கானிக், ஊட்டியின் 200-வது வயதை கொண்டாடும் விதமாக ஊட்டி 200 சின்னம் என பலவகையான அலங்காரங்கள் 50 ஆயிரம் வண்ண ரோஜாக்களை கொண்டு செய்யப்பட்டு இருந்தன.

இன்று சனிக்கிழமை விடுமுறை நாள் என்பதால் ஊட்டியில் சுற்றுலா பயணிகள் குவிந்து இருந்தனர்.

ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா உள்ளிட்ட இடங்களில் கூட்டம் அதிகமாக இருந்தது. இதன் காரணமாக பல இடங்களில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

Tags:    

Similar News