விபத்தில் மூளைச்சாவு அடைந்த நிதி நிறுவன உரிமையாளர் உடல் உறுப்புகள் தானம்
- ஆம்புலன்ஸ் மூலம் குமாரவடிவேல் உடல் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு எடுத்து வரப்பட்டது.
- உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்த குமார வடிவேலின் குடும்பத்தினரை பொது மக்கள், டாக்டர்கள் பாராட்டினர்.
வெள்ளகோவில்:
திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் அருகே உள்ள மூத்தாம் பாளையத்தை சேர்ந்தவர் குமார வடிவேல் (வயது 56).
இவர் கேரள மாநிலம் தலைச்சேரியில் நிதி நிறுவனம் நடத்தி வந்தார்.
சில தினங்களுக்கு முன்பு தலைச்சேரி பகுதியில் பணம் வசூல் செய்ய சென்ற போது, வாகன விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்தார்.
இந்தநிலையில் அவரது குடும்பத்தினர் குமார வடிவேல் உடல் உறுப்புகளை தானம் செய்ய முடிவு செய்தனர்.
இதையடுத்து ஆம்புலன்ஸ் மூலம் குமாரவடிவேல் உடல் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு எடுத்து வரப்பட்டது. அங்கு கண், கல்லீரல் உள்ளிட்ட உடல் உறுப்புகள் ஆபரேசன் மூலம் எடுக்கப்பட்டு, உறுப்புகள் தேவைப்படும் நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டது.
இன்று காலை குமார வடிவேலின் உடல் அரசு மரியாதையுடன் சொந்த ஊரான மூத்தாம்பாளையம் கிராமத்தில் தகனம் செய்யப்பட்டது.
தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் பெலிக்ஸ் ராஜா, காங்கயம் தாசில்தார் மோகனன் மற்றும் நில வருவாய் அலுவலர் சுந்தரி, கிராம நிர்வாக அலுவலர்கள் மோகன் பிரபு, கவுசல்யா ஆகியோர் அரசின் சார்பில் அஞ்சலி செலுத்தினர்.
குமாரவடிவேலுக்கு சித்ரா என்ற மனைவியும் 2 மகள்களும் உள்ளனர். உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்த குமாரவடிவேலின் குடும்பத்தினரை பொது மக்கள், டாக்டர்கள் பாராட்டினர்.