உள்ளூர் செய்திகள்

ஓசூரில் 2 போலி பெண் டாக்டர்கள் கைது- கிளினிக், மருந்தகத்திற்கும் 'சீல்' வைப்பு

Published On 2024-11-12 12:30 GMT   |   Update On 2024-11-12 12:30 GMT
  • மக்கள் முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு புகார் அளித்துள்ளனர்.
  • கவுரி நடத்தி வந்த கிளினிக் மற்றும் லேப், மருந்தகம் ஆகியவற்றை மருத்துவ குழுவினர் சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

ஓசூர்:

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளியை சேர்ந்தவர் கவுரி (வயது 34). இவர், ஓசூர் அரசனட்டி பகுதியில் தங்கி இருந்து கிளினிக், லேப் மற்றும் மருந்தகம் ஆகியவற்றை நடத்தி வந்தார். டி-பார்ம், பி.இ.எம்.எஸ். வரை மட்டுமே படித்த இவர், அப்பகுதி மக்களுக்கு ஆங்கில மருத்துவம் பார்த்து வந்தார்.

அதே போல் இவரது கிளினிக்கில் வேலை பார்த்து வந்த ஓசூர் மூக்கண்டப்பள்ளியை சேர்ந்த சிலம்பரசி 10-ம் வகுப்பு வரை மட்டுமே படித்து விட்டு அவரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்ததாக தெரிகிறது.

இதுதொடர்பாக அந்த பகுதி மக்கள் முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு புகார் அளித்துள்ளனர். தொடர்ந்து ஓசூர் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் ஞானமீனாட்சி, ஓசூர் சரக மருந்து கட்டுப்பாட்டு ஆய்வாளர் ராஜீவ் காந்தி ஆகியோர் தலைமையிலான மருத்துவ குழுவினர், ஓசூர் சிப்காட் போலீசார் நேற்று மூக்கண்டப்பள்ளி அரசனட்டி பகுதிக்கு சென்று கவுரி நடத்தி வந்த கிளினிக்கில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வில் கவுரியும், சிலம்பரசியும் போலி டாக்டர்கள் என்பது தெரிய வந்தது. இதையடுத்து மருத்துவத்துறையினர் அளித்த புகாரின் பேரில் 2 பேரையும் ஓசூர் சிப்காட் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து கவுரி நடத்தி வந்த கிளினிக் மற்றும் லேப், மருந்தகம் ஆகியவற்றை மருத்துவ குழுவினர் சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News