புதுக்கோட்டை மாவட்டத்தில் 11 திருட்டு வழக்குகளில் தொடா்புடைய 5 பேர் கைது
- 11 நகை திருட்டு வழக்குகளில் குற்றவாளிகளைக் கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டு புலன் விசாரணை நடைபெற்று வந்தது.
- 2 கைப்பேசிகள், இரண்டு இரு சக்கர வாகனங்கள், இரு நான்கு சக்கர வாகனங்கள் ஆகியவையும் கைப்பற்றப்பட்டன.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம், நமண சமுத்திரம் மற்றும் அரிமளம் பகுதிகளில் நடைபெற்ற 11 திருட்டு வழக்குகளில் தொடா்புடைய 5 பேரை தனிப்படையினா் கைது செய்து, அவா்களிடமிருந்து தங்கம் மற்றும் வெளளிக் கட்டிகளைப் பறிமுதல் செய்துள்ளனா்.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி உட்கோட்டம் திருமயம், நமணசமுத்திரம் மற்றும் அரிமளம் பகுதிகளில் நடைபெற்ற 11 நகை திருட்டு வழக்குகளில் குற்றவாளிகளைக் கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டு புலன் விசாரணை நடைபெற்று வந்தது.
விசாரணையில், அறந்தாங்கி எல்என்புரத்தைச் சோ்ந்த கோவிந்தராஜ் மகன் தேவா (வயது58), சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் கீழத்தெரு மீனாட்சி சுந்தரம் மகன் ஹரிஹரன் (44), ஆவுடையார்கோவில் முண்டகவயல் சமத்துவபுரத்தைச் சோ்ந்த சுப்பையா மகன் வெங்கடேஷ் (26), அறந்தாங்கி பூவைமாநகா் அலஞ்சரக்காடு கணபதி மகன் சொக்கலிங்கம் (54), கீரமங்கலம் வேப்பங்குடி மேற்கு செட்டித் தெருவைச் சோ்ந்த துரைராஜ் மகன் தங்கபாண்டியன் (46) ஆகிய 5 பேரையும் தனிப்படையினா் கைது செய்தனா்.
இவா்களிடமிருந்து 100 கிராம் எடை கொண்ட தங்கக் கட்டி, 5.750 கிலோ எடை கொண்ட வெள்ளிக் கட்டிகள், ரொக்கம் ரூ.1,500, 2 கைப்பேசிகள், இரண்டு இரு சக்கர வாகனங்கள், இரு நான்கு சக்கர வாகனங்கள் ஆகியவையும் கைப்பற்றப்பட்டன.
கைது செய்யப்பட்ட 5 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனா். குற்றவாளிகளைக் கைது செய்த தனிப்படையினரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வந்திதா பாண்டே நேரில் அழைத்துப் பாராட்டினார்.