மருத்துவர் தாக்கப்பட்ட விவகாரம்: கைது செய்யப்பட்ட வாலிபருக்கு 15 நாள் நீதிமன்ற காவல்
- மருத்துவர் பாலாஜி ஜெகந்நாத்தின் உடல் நலம் சீராக உள்ளது என டாக்டர்கள் தெரிவித்தனர்.
- இந்த சம்பவத்தில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் உடனடியாக கைது செய்தனர்.
சென்னை:
கிண்டி அரசு மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜி மீது தாக்குதல் நடத்தப்பட்டது. விக்னேஷ் என்ற நபர் மருத்துவர் பாலாஜியை மருத்துவமனையில் வைத்து கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தாக்குதலுக்கு ஆளான மருத்துவர் பாலாஜிக்கு அனைத்து சிகிச்சைகளை வழங்கவும், இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தவும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் உடனடியாக கைது செய்தனர். மேலும் வாலிபர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே, மருத்துவரை தாக்கிய விக்னேஷ் மீது 5 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்மீது கொலை முயற்சி, ஆபாசமாக பேசுவது உள்பட 5 பிரிவுகளின்கீழ் கிண்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அரசு மருத்துவர் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு எதிர்க்கட்சிகள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், மருத்துவரை கத்தியால் குத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட வாலிபர் விக்னேஷ்க்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து சைதாப்பேட்டை நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து வாலிபர் விக்னேஷை போலீசார் அழைத்துச் சென்றனர்.