19 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
- கேரள கடலோரப் பகுதிகளை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் மற்றொரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது.
- தமிழ்நாட்டில் இன்று முதல் 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
வங்கக்கடலில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. இது தமிழகப் பகுதிகளை நோக்கி நகர்ந்தது. இதனால் சில இடங்களில் கனமழையும், பல இடங்களில் மிதமான மழையும் பெய்தது. இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி நேற்று வலுவிழந்து, வட தமிழக கடலோரப் பகுதிகளை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியாக நிலவுகிறது.
இதேபோல் கேரள கடலோரப் பகுதிகளை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் மற்றொரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதனால் தமிழ்நாட்டில் இன்று முதல் 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது.
இந்நிலையில் தமிழ்நாட்டின் 19 மாவட்டங்களில் காலை 10 மணி வரை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
சென்னை, திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், கடலூர், தூத்துக்குடி, நெல்லை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், ராமநாதபுரம், கன்னியாகுமரி, நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திண்டுக்கல் மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.