தமிழ்நாடு

எழுத்தாளர் ராஜ் கௌதமன் காலமானார்

Published On 2024-11-13 09:26 GMT   |   Update On 2024-11-13 09:26 GMT
  • அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சமூகவியல் துறையிலும் முதுகலைப் பட்டமும் பெற்றார்.
  • இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் எழுத்தாளர் பேராசிரியர் ராஜ் கௌதமன் இன்று காலமானார். அவருக்கு வயது 74.

கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக இருந்த நிலையில் இன்று காலை ராஜ் கௌதமன் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இவரது இறுதிச் சடங்குகள் நாளை பாளையங்கோட்டையில் உள்ள வீட்டில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

எஸ். புஷ்பராஜ் என்ற இயற்பெயர் கொண்ட ராஜ் கௌதமன் விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள புதுப்பட்டியில் 1950-ம் ஆண்டு ஆகஸ்ட் 25-ந்தேதி பிறந்தார்.

புதுப்பட்டியில் தொடக்கக் கல்வியும் மதுரையில் மேல்நிலைக்கல்வியும் முடித்தபின் பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் விலங்கியல் துறையில் பட்டம் பெற்றார். பின் தமிழ் இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சமூகவியல் துறையிலும் முதுகலைப் பட்டமும் பெற்றார். அ. மாதவையா குறித்து ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார்.

ராஜ் கௌதமன் புதுச்சேரியில் காரைக்கால் அரசு கலைக்கல்லூரி, தாகூர் கலைக்கல்லூரியில் தமிழ்ப்பேராசிரியராகப் பணியாற்றினார். காஞ்சி மாமுனிவர் பட்டமேற்படிப்பு மையத்தில் தலைமைப் பேராசிரியராகப் பணிபுரிந்தார். 2011-ம் ஆண்டு பணி ஓய்வு பெற்றார்.

Similar News