ஜானகி ராமச்சந்திரன் நூற்றாண்டு விழா: AI-இல் உரையாற்றிய எம்.ஜி.ஆர். - ஒன்ஸ்மோர் கேட்ட அ.தி.மு.க.வினர்
- முன்னாள் அமைச்சர் பொன்னையன் வரவேற்று பேசினார்.
- அதிமுக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட இருக்கிறது.
முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் மனைவியும் தமிழகத்தின் முதல் பெண் முதல்-அமைச்சருமான ஜானகி ராமச்சந்திரனின் நூற்றாண்டு விழா அ.தி.மு.க. சார்பில் இன்று கொண்டாடப்பட்டது. சென்னை வானகரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்ற விழா நாதகான சிகாமணிகளான சகோதரர்கள் தி.ச. பாண்டியன் தி.ச. சேதுராம் குழுவினரின் மங்கள இசையுடன் தொடங்கியது. முன்னாள் அமைச்சர் பொன்னையன் வரவேற்று பேசினார்.
அ.தி.மு.க. பொதுச் செய லாளர் எடப்பாடி பழனிசாமி விழா மேடையில் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா மற்றும் ஜானகி அம்மையாரின் உருவ படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் குத்து விளக்கு ஏற்றி வைத்து ஜானகி அம்மை யாரின் உருவப் படத்தை திறந்து வைத்தார். இந்த படம் ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட இருக்கிறது.
இதன் தொடர்ச்சியாக நூற்றாண்டு விழா மலரை வெளியிட்டு, ஜானகி அம்மையாருடன் பயணித்த நடிகைகள் வெண்ணிற ஆடை நிர்மலா, சச்சு, குட்டி பத்மினி, உள்ளிட்ட வர்களுக்கு பொன்னாடை அணிவித்து நினைவு பரிசுகளையும் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். இதைத் தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகள் அடுத்தடுத்து நடந்தன.
அதன்படி நிகழ்ச்சியில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி. ராமச்சந்திரன் ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் உரையாற்றினார். அப்போது, தான் அனைவருடன் இருப்பதாகவும், அனைவரையும் நலம் விசாரித்து சில நிமிடங்கள் பேசுவது போல் வீடியோ உருவவாக்கப்பட்டு இருந்தது. எம்.ஜி.ஆர். தற்போது பேசுவதை போல் உருவாக்கப்பட்ட வீடியோ நிறைவுற்றதும், அங்கிருந்த அ.தி.மு.க. கட்சியினர் வீடியோவை மீண்டும் போடச் சொல்லி ஒன்ஸ் மோர் கேட்டனர். இதனால் வீடியோ மீண்டும் ஒளிபரப்பப்பட்டது.