தமிழ்நாடு

திருப்பதி லட்டில் கலப்பட புகார்- திண்டுக்கல் நிறுவனத்தில் மாதிரிகளை சேகரித்த ஆந்திர சிறப்பு புலனாய்வு குழுவினர்

Published On 2024-11-24 11:47 GMT   |   Update On 2024-11-24 11:47 GMT
  • நெய் வினியோகம் தொடர்பாக விசாரணை நடத்த ஆந்திர அரசு சிறப்பு குழு அமைத்தது.
  • பால் பொருட்கள் அனைத்திலும் மாதிரிகள் சேகரிக்கப்பட்டன.

திண்டுக்கல்:

திருப்பதியில் பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டு பிரசாதம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். திருமலையில் தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு லட்டு பிரசாதமாக வழங்கப்படுவதுடன் கூடுதலாக பணம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். இந்த நிலையில் திருப்பதியில் பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டு பிரசாதத்தில் சேர்க்கப்படும் நெய்யில் கலப்படம் செய்யப்பட்டதாகவும், அதில் விலங்குகள், மீன்களின் கொழுப்புகள் இருப்பதாகவும் தகவல் வெளியானது.

லட்டு பிரசாதத்திற்கான நெய் திண்டுக்கல்லை சேர்ந்த தனியார் பால் நிறுவனமான ஏ.ஆர்.டெய்ரி சார்பில் வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. நெய் வினியோகம் தொடர்பாக விசாரணை நடத்த ஆந்திர அரசு சிறப்பு குழு அமைத்தது. திருப்பதி தேவஸ்தானத்துடன் ஏற்படுத்திய ஒப்பந்தத்தை திண்டுக்கல் தனியார் பால் நிறுவனம் மீறி செயல்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த நிலையில் மத்திய உணவு பாதுகாப்புத்துறை சார்பில் உணவு மாதிரி எடுத்து பகுப்பாய்வு செய்யப்பட்டது. இதனிடையே நெய் தொடர்பாக உறுதியான ஆதாரம் இல்லாத நிலையில் அதனை பொதுவெளியில் கூறியதற்காக ஆந்திர அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. மேலும் மக்களின் மத நம்பிக்கை சார்ந்த இந்த விவகாரத்தில் அரசியல் தலையீடு இல்லாமல் விசாரணை நடத்த சி.பி.ஐ. இயக்குனரின் கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்தது.

மத்திய உணவு பாதுகாப்பு அலுவலர் தலைமையிலான அதிகாரிகள் திண்டுக்கல் தனியார் பால் நிறுவனத்தில் 14 மணிநேரத்திற்கும் மேலாக சோதனை நடத்தினர். மேலும் நெய் தயாரிப்பின் ஒவ்வொரு நிலையிலும் உணவு மாதிரிகளை எடுத்துச் சென்றனர். பால் பொருட்கள் அனைத்திலும் மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. 3 கார்களில் 11 பேர் வந்து தொடங்கிய சோதனை இரவுவரை நீடித்தது. மேலும் நெய்களின் பகுப்பாய்வு மாதிரிகளை எடுத்துச் சென்று ஆய்வுக்கு உட்படுத்துகின்றனர்.

அதன் பின்னர் இதுகுறித்து இதன் அறிக்கை சமர்ப்பிக்கப்படும்.

Tags:    

Similar News