மக்களை கவரும் நடமாடும் `நந்தவனம்' - ஆட்டோ டிரைவரின் முயற்சிக்கு குவியும் பாராட்டுகள்
- சென்னை அரசினர் விடுதி அருகே வலம் வந்த அவரது ஆட்டோவை பார்க்கும்போது வித்தியாசமாக இருந்தது.
- ஆட்டோவில் பயணிப்பவர்கள் படிப்பதற்காக திருக்குறள் புத்தகமும் வைத்து இருக்கிறேன் என்றார்.
சென்னை:
உலக வெப்பமயமாதல் காரணமாக இயற்கை சூழ்நிலையும் மாறிவருகிறது. இதனால் ஏற்படும் ஆபத்தை குறைக்க ஆங்காங்கே மரங்களை நடவேண்டும் என்ற குரல் ஒலித்துக்கொண்டு இருக்கிறது. இயற்கை ஆர்வலர்கள் பலரும் இதையே சொல்கிறார்கள்.
நம்மில் பலருக்கு மரம் நட விருப்பம் இருந்தாலும் அதை எப்படி செயல்படுத்துவது என்ற யோசனை இருக்கும். ஆனால் சென்னையை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஒருவர், இயற்கை மீது ஏற்பட்ட ஆர்வம் காரணமாக தனது ஆட்டோவையே பசும் தோட்டமாக மாற்றி இருக்கிறார்.
சென்னை அரசினர் விடுதி அருகே வலம் வந்த அவரது ஆட்டோவை பார்க்கும்போது வித்தியாசமாக இருந்தது. பச்சை பசேல் என்று நடமாடும் நந்தவனம் போன்று இருந்த அந்த ஆட்டோவை பலரும் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
மேலும் அந்த ஆட்டோவில் செடி வளர்ப்போம், மழை பெறுவோம். இயற்கையுடன் வாழ்வோம், விழாக்களில் பேனர் வைத்து ரசிக்கும் இளைஞர்களே, மரக்கன்றுகள் நடுங்கள், நாடே பசுமையாகும், தண்ணீர் இல்லையேல் எவ்வுயூரும் இல்லை என்று பல்வேறு வாசகங்களை எழுதி வைத்து இருந்தார்.
அந்த ஆட்டோவை நிறுத்தி, எதற்காக இப்படி செய்து இருக்கிறீர்கள். வாடிக்கையாளர்களை கவருவதற்காகவா? அல்லது இயற்கை மீதான ஆர்வமா? என்று கேட்டோம்.
இதையடுத்து அவர் தனது பெயர் குபேந்திரன் என்றும், கொட்டிவாக்கத்தை சேர்ந்தவர் என்றும் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, பேசத்தொடங்கினார். அவர் கூறியதாவது:-
சிறிய வயதில் இருந்தே பசுமை மீது தீராத காதல் இருந்தது. இதற்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று எண்ணியபோது, ஏன் நம்முடைய ஆட்டோவிலேயே அதை செய்தால் என்ன என்று யோசித்தேன். அப்புறம்தான் என் ஆட்டோவை தோட்டம்போல் மாற்றினேன். இதற்காக ஆட்டோவின் முன்னும் பின்னும் தொட்டிகளை வைத்து செடிகளை வளர்த்து வருகிறேன். தோட்டம்போல் இருக்க வேண்டும் என்பதற்காக கூரைப்பகுதியில் செயற்கை புற்களையும், இருக்கையை பசுமை நிறமாகவும் மாற்றினேன்.
என் ஆட்டோவில் பயணிக்கும் பயணிகள், தோட்டத்தில் இருப்பது போன்ற உணர்வு இருப்பதாக என்னிடம் கூறுவார்கள். அவர்கள் ஆட்டோவை விட்டு இறங்கும்போது, பசுமை மீதான ஆர்வம் அவர்களின் மனதை தொட்டு சென்றிருக்கும். இதன் மூலம் மற்றவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டால் நல்லதுதானே என்றார்.
இவ்வாறு செடி கொடிகள் இருப்பது பயணிகளுக்கு அசவுகரியத்தை ஏற்படுத்துமா? என்று கேட்டபோது குபேந்திரன், 'இல்லை, எல்லோருமே ரசிக்கிறார்கள். பயணிகளும் தங்களுக்கு மன அழுத்தம் குறைந்து விட்டதாகவே சொல்வார்கள். இது எனக்கு மகிழ்ச்சி, ஒரு மன நிறைவு'. மேலும் எனது ஆட்டோவில் பயணிப்பவர்கள் படிப்பதற்காக திருக்குறள் புத்தகமும் வைத்து இருக்கிறேன் என்றார்.
எல்லோரும் மரம் வளர்ப்போம் என்று வாய்வார்த்தையால் சொல்லிவருவதை, ஆட்டோ டிரைவர் குபேந்திரன் செயல் மூலம் செய்து காட்டி இருப்பது அவருக்கு பாராட்டுகளை அள்ளித்தருகிறது.