தமிழ்நாடு

மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிகளில் புறக்காவல் நிலையம் அமைக்கப்படும்- அமைச்சர்

Published On 2024-11-14 08:37 GMT   |   Update On 2024-11-14 08:37 GMT
  • மருத்துவ ஊழியர்களுக்கு மிகப்பெரிய வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.
  • ஸ்கேன், மெட்டல் டிடெக்டர் பரிசோதனையின் சாத்திய கூறுகள் பற்றி ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.

சென்னை:

சென்னை கிண்டியில் உள்ள அரசு மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்திய சம்பவத்தையடுத்து அரசு மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்பட விருக்கும் பாதுகாப்பு நடவடிக்கை பற்றி மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கத்திக்குத்தால் காயம் அடைந்த மருத்துவர் பாலாஜியை இன்று நேரில் பார்த்து நலம் விசாரித்தேன். அவர் நலமுடன் இருக்கிறார். அவருக்கு ஏற்கனவே பேஸ் மேக்கர் கருவி பொருத்தப்பட்டுள்ளது. அதன் செயல் பாடுகளை அந்த நிறுவனத்தை சேர்ந்தவர்கள் நேரில் வந்து ஆய்வு செய்துள்ளார்கள்.

தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து மருத்துவர் பாலாஜி பிற்பகலில் கட்டணம் செலுத்தும் தனி வார்டுக்கு மாற்றப்பட்டார்.

மருத்துவர் பாலாஜி மிகச் சிறந்த மருத்துவர். அவருக்கு இன்னும் 5 ஆண்டுகள் பணிக்காலம் உள்ளது. இந்த பணிக்காலத்தையும் கிண்டி ஆஸ்பத்திரியிலேயே செய்ய வாய்ப்பு கிடைத்தால் மகிழ்ச்சி அடைவேன் என்று நலம் விசாரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தெரிவித்துள்ளார்கள்.


டாக்டர் பாலாஜி மீது கொடுமையான தாக்குதல் நடத்திய விக்னேஷ் மீது 126 (2) அத்துமீறி நுழைதல், 115 (2) காயத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்படுதல், 118 (1) ஆபத்தான ஆயுதங்களால் காயம் ஏற்படுத்துதல், 121 (2) பணியில் இருக்கும் பொது ஊழியருக்கு காயம் ஏற்படுத்துதல், 109 கொலை முயற்சியில் ஈடுபடுதல், 351 (3) உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் காயத்தை ஏற்படுத்தி மிரட்டுதல் என 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் மருத்துவ ஊழியர்களுக்கு மிகப்பெரிய வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும் அரசோடு இணைந்து மருத்துவ கட்டமைப்பு மற்றும் பொதுமக்கள் சேவை ஆகியவை பாதித்து விடக்கூடாது என்பதில் மருத்துவர்களும் கவனமாக இருப்பதற்கு பாராட்டுக்கள்.

அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் இதர அரசு மருத்துவ மனைகளில் காவல் மற்றும் சுகாதாரதுறை இணைந்து பாதுகாப்புக் குறித்து கூட்டுத் தணிக்கை நடத்தப்பட வேண்டும்.

36 மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள், 37 மாவட்ட அரசு மருத்துவ மனைகள் மற்றும் வட்டார மருத்துவமனைகளில் விரைவில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும்.

அனைத்து மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளிலும் புறக்காவல் நிலையங்கள் அமைக்கப்படும். மருத்துவமனைகளில் தேவையான வெளிச்சம், மற்றும் விளக்குகள் உள்ளனவா? என்பதை உறுதி செய்ய வேண்டும்.

அனைத்து மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணி சார்ந்த பணியாளர்கள் காவல் உதவி என்கிற செயலியை அவர்களது கைப்பேசிகளில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.

பொதுமக்கள் மற்றும் நோயாளிகளின் உதவியாளர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவதை முறைப்படுத்த பார்வையாளர் அடையாள அட்டை முறை அமல்படுத்தப்படும்.

அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை வெளி நோயாளிகள் பிரிவு செயல்படுகிறது. இதில் தினமும் ஆயிரக்கணக்கானோர் வருகிறார்கள். எனவே ஸ்கேன், மெட்டல் டிடெக்டர் பரிசோதனையின் சாத்திய கூறுகள் பற்றி ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த சம்பவத்தில் மருத்துவரின் சிகிச்சை முறையில் குறைசொல்ல எந்த முகாந்திரமும் இல்லை. விக்னேஷின் தாயார் புற்று நோய் முற்றிய நிலையில் இருக்கிறார். அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கிறார்கள். இருந்தாலும் தாய் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற வெறியால் இந்த செயலில் விக்னேஷ் ஈடுபட்டுள்ளார். இது கண்டனத்துக்குரியது. அவருக்கு கடுமையான தண்டனை பெற்று தரப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News