மருத்துவருக்கு கத்திக்குத்து: 24 மணி நேர பாதுகாப்பு அளிக்க வேண்டும் - டிஜிபி வாய்மொழி உத்தரவு
- இந்திய மருத்துவர் சங்கம் கண்டனம் தெரிவித்து ஒருநாள் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்தது.
- அனைத்து மருத்துவமனைகளுக்கும் 24 மணி நேர பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜி கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மருத்துவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், இந்திய மருத்துவர் சங்கம் கண்டனம் தெரிவித்ததோடு ஒருநாள் வேலை நிறுத்த போராட்டத்தையும் அறிவித்தது. தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் மருத்துவர்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் அனைத்து மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளிலும் புறக்காவல் நிலையங்கள் அமைக்கப்படும் என்று தெரிவித்து இருந்தார்.
இதுதவிர, மருத்துவமனைகளில் தேவையான வெளிச்சம், மற்றும் விளக்குகள் உள்ளனவா? என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், மருத்துவர் தாக்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து டிஜிபி சங்கர் ஜிவால், மருத்துவர்கள் பாதுகாப்பு குறித்து 24 மணி நேரமும் கண்காணிக்க வேண்டும் என ஐ.ஜி.-க்கள், காவல் ஆணையர்களுக்கு வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அனைத்து மருத்துவமனைகளுக்கும் 24 மணி நேர பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது. இத்துடன் சென்னையில் வருகிற நவம்பர் 18 ஆம் தேதி ஆலோசனை கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள காவல் ஐ.ஜி.க்கள் மற்றும் காவல் ஆணையர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.