உள்ளூர் செய்திகள்

இறந்த ஆசிரியருக்கு ஓய்வூதியம் பெற்று ரூ.49.69 லட்சம் சுருட்டல்- உயிரோடு இருப்பதாக சான்றிதழ் பெற்று நூதன மோசடி

Published On 2024-11-13 11:36 GMT   |   Update On 2024-11-13 11:36 GMT
  • பல்வேறு முறைகளில் மோசடியாக அளித்து, ரெங்கராஜனின் ஓய்வூதியம் அவரது வங்கி கணக்கிற்கு தொடர்ந்து வருமாறு செய்துள்ளனர்.
  • சம்பவம் தொடர்பாக துறையூர் உதவி கருவூல அலுவலர் துறையூர் போலீசில் புகார் செய்தார்.

துறையூர்:

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள மாராடி கிராமத்தைச் சேர்ந்தவர் ரெங்கராஜன். இவர் துறையூரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளி ஒன்றில் வரலாற்று ஆசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவருக்கு துறையூர் சார் நிலை கருவூலம் மூலம் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் ரெங்கராஜன் கடந்த 2015ம் ஆண்டு இயற்கையாக மரணமடைந்துள்ளார்.

ரெங்கராஜனின் வாரிசுகளான மனைவி ஜெயக்கொடி மற்றும் மகன் ஜெயதேவன் ஆகிய 2 பேரும், அவரின் இறப்பு குறித்து சார்நிலை கருவூலத்திற்கு தகவல் தெரிவிக்காமல் மறைத்துள்ளனர். மேலும் கருவூலம் மற்றும் கணக்கு துறையின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்கள் உயிருடன் உள்ளனரா? என்பதை அறிய நேர்காணல் நடத்தப்படும். நேர்காணலுக்கு வர இயலாதவர்கள் அரசிதழ் பதிவு பெற்ற அலுவலரிடம் இருந்து ஓய்வூதிய உயிர் வாழ் சான்று பெற்று சார்நிலை கருவூலத்தில் அளிப்பது வழக்கம். இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல், மே மாதங்களில் ஓய்வூதியர்கள் அளிக்கும் உயிர்வாழ் சான்றினை இறந்த ரெங்கராஜனின் வாரிசுகள் பல்வேறு முறைகளில் மோசடியாக அளித்து, ரெங்கராஜனின் ஓய்வூதியம் அவரது வங்கி கணக்கிற்கு தொடர்ந்து வருமாறு செய்துள்ளனர்.

இவ்வாறு வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் ஓய்வூதியத்தை ஜெயக்கொடி மற்றும் ஜெயதேவன் ஆகிய இருவரும் பல்வேறு தவணைகளில், பல்வேறு காசோலைகள் வாயிலாக கடந்த 2015ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் 2024ம் ஆண்டு மே மாதம் வரை ரூ.49 லட்சத்து 69 ஆயிரத்து 279 வரையிலான தொகையினை அரசினை ஏமாற்றி பெற்றுள்ளனர்.

இந்நிலையில் இந்த ஆண்டு நடைபெற்ற நேர்காணலுக்கு ரெங்கராஜன் வராததால், சந்தேகமடைந்த கருவூல அதிகாரிகள் ரெங்கராஜனின் இருப்பிட முகவரிக்கு நேரில் சென்று விசாரணை செய்த போது, ரெங்கராஜன் கடந்த 2015ம் ஆண்டே இறந்ததை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.

மேலும் கடந்த வருடம் அளித்த ஓய்வூதிய உயிர் வாழ் சான்றினை ஆய்வு செய்ததில், 2015 ஆம் ஆண்டு இறந்த ரெங்கராஜனுக்கு மாராடி கிராம நிர்வாக அலுவலர் ஹேமலதா என்பவர் 26.9.2022 அன்று ரெங்கராஜன் உயிருடன் இருப்பதாக கூறி, உயிர் வாழ் உறுதி சான்று அளித்ததை அறிந்து அதிகாரிகள் மேலும் அதிர்ச்சி அடைந்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக துறையூர் உதவி கருவூல அலுவலர் துறையூர் போலீசில் புகார் செய்தார். இப்புகாரின் பேரில் துறையூர் போலீசார் மோசடி நடைபெற்ற விதம், மோசடிக்கு உடந்தையாக இருந்தவர்கள் பற்றி விரிவான விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். துறையூர் அருகே இறந்தவரின் இறப்பை மறைத்து மோசடியாக ஓய்வூதியம் பெற்று வந்து, தற்சமயம் வெளியான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News