நடுரோட்டில் திடீரென தீப்பிடித்து எரிந்த லாரி
- லாரியில் ஏற்றி வந்த நிலக்கரியும் தீப்பிடிக்க அதில் இருந்து அதிக புகை வந்தது.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சாவூர்:
காரைக்காலில் இருந்து 35 டன் நிலக்கரியை ஏற்றிக்கொண்டு டாரஸ் லாரி ஒன்று பெரம்பலூருக்கு புறப்பட்டது. லாரியை மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே ஓதவந்தான் குடிகாட்டை சேர்ந்த அந்தோணி ஆனந்தராஜ் (வயது 40) என்பவர் ஓட்டி வந்தார்.
வரும் வழியில் திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே கோவில்வெண்ணி சுங்கச்சாவடி அருகில் லாரி டயர் பஞ்சர் ஆனது. இதனை சரி செய்து விட்டு அந்தோணி ஆனந்தராஜ் லாரியை தஞ்சாவூர் நோக்கி ஓட்டி வந்தார். நள்ளிரவில் தஞ்சை மாரியம்மன் கோவில் எதிரில் வந்த போது சாலையில் வைக்கப்பட்டிருந்த பேரிகார்டு அருகில் டிரைவர் அந்தோணி ஆனந்தராஜ் பிரேக் அடித்துள்ளார். அப்பொழுது திடீரென லாரி டயர்கள் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது.
புகை வருவதை கண்டவுடன் லாரிலிருந்து அந்தோணி ஆனந்தராஜ் உடனடியாக இறங்கி குதித்தார். 10 டயர்களும், டீசல் டாங்கும் பற்றி எரிய ஆரம்பித்தது. லாரியில் ஏற்றி வந்த நிலக்கரியும் தீப்பிடிக்க அதில் இருந்து அதிக புகை வந்தது. அந்த பகுதியே தீப்பிளம்பாகவும், புகை மூட்டமாகவும் காட்சியளித்தது.
இது பற்றி தகவல் அறிந்த தஞ்சாவூர் தீயணைப்பு துறை வீரர்கள் விரைந்து வந்து தண்ணீர் பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருந்தாலும்பாதி அளவு நிலக்கரி எரிந்து சாம்பலானது. லாரியின் பெரும்பகுதியும் சேதமானது. இது குறித்து தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.