பிரசித்தி பெற்ற சித்தூர் தென்கரை சாஸ்தா கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம்
- சித்தூர் தென்கரை சுவாமிக்கு பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டது.
- 1-ந் தேதி இரவு கிடா வாகனத்தில் ஐயன் வீதி உலா நடைபெறும்.
வள்ளியூர்:
வள்ளியூர் அருகே கண்ணநல்லூர் கிராமம் நம்பி ஆற்றின் கரையில் அய்யப்பனின் அவதாரம் என்று அழைக்கப்படுகின்ற சித்தூர் தென்கரை மகாராசேசுவரர் சாஸ்தா கோவிலில் பங்குனி உத்திரம் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. சித்தூர் தென்கரை சுவாமிக்கு பல்வேறு அபிஷே கங்கள் செய்யப்பட்டது.திருப்பணிக்கு பூஜைகள் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.
வேத மந்திரங்கள் மேளதாளங்கள் முழங்க மகா மண்டபத்தில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. மேலும் கொடிமரத்துக்கு 21 வகையான அபிஷேக திரவியம் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. மகா தீபாராதனையும் நடந்தது. மதியம் உச்சிகால பூஜையும், இரவு விசேஷ வாகனத்தில் ஐயன் வீதியுலா நடைபெற்றது
வருகிற 1-ந் தேதி இரவு கிடா வாகனத்தில் ஐயன் வீதி உலா நடைபெறும். 2-ந் தேதி காலை தளவாய் சுவாமி க்கு கற்பூர தீப ஆராதனை மற்றும் வன்னிய ராஜாக்கள், வீரமணி ஐயனுக்கும், மஹா ராஜேஸ்வரர் அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடைபெறும். 4-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) பங்குனி உத்திரம் மதியம் உச்சிகால பூஜை, இரவு வெள்ளிக்குதிரை வாக னத்தில் ஐயன் பாரி வேட்டை வீதி உலா நடைபெறும்.
5-ந் தேதி காலை தேரோட்டம், மதியம் உச்சிகால பூஜை, இரவு புலி வாகனத்தில் ஐயன் வீதி உலா நடைபெறும்.7-ந் தேதி மதியம் உச்சிகால பூஜை, மஞ்சள் நீராட்டு வைபவம் ஐயன் சன்னதி அமரும் தருணம், இரவு கொடி இறக்கத்துடன் முடிவடையும்.
திருவிழா 11 நாட்கள் கொண்டாடப்படுகிறது. இதில் கோவில் நிர்வாகிகள், அனைத்து பூசாரிகள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். கண்ண நல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் மகாராஜன், செயல் அலுவலர் பொன்னி திருவிழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.