உள்ளூர் செய்திகள்

முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக டவுண் குறுக்குத்துறையில் தாமிரபரணி ஆற்று படித்துறையில் திரண்ட பொதுமக்களை படத்தில் காணலாம்.

ஆடி அமாவாசையையொட்டி தாமிரபரணி ஆற்றங்கரையில் தர்ப்பணம் கொடுக்க குவிந்த மக்கள்

Published On 2023-08-16 09:07 GMT   |   Update On 2023-08-16 09:07 GMT
  • முன்னோர்களுக்கு திதி கொடுப்பது, நேர்த்திக்கடன்களை செலுத்துவது குடும்பத்தின் வளர்ச்சிக்கு வித்திடும் என்பது ஐதீகம்.
  • ஆடி அமாவாசையான இன்று நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் நீர்நிலைகளில் அதிகாலை முதலே மக்கள் கூட்டம் குவிந்த வண்ணம் இருந்தது.

நெல்லை:

ஆடி அமாவாசை நாளில் புண்ணிய தலங்களுக்கு சென்று நீர் நிலைகளில் நீராடி விட்டு தங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுப்பது, நேர்த்திக்கடன்களை செலுத்துவது குடும்பத்தின் வளர்ச்சிக்கு வித்திடும் என்பது ஐதீகம்.

நெல்லை

இதனால் ஆடி அமாவாசை நாளில் அதிகாலையிலேயே பொதுமக்கள் நீர்நிலைகளில் சென்று தர்ப்பணம் செய்வார்கள். காசி நதிக்கு ஒப்பாக கருதப்படும் நெல்லை தாமிரபரணி நதியில் அமாவாசை நாளில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் குடும்பத்துடன் வந்திருந்து தாமிரபரணி ஆற்றில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபாடு நடத்துவது வழக்கமாக கொண்டுள்ளனர்.

இந்த ஆண்டும் ஆடி அமாவாசையான இன்று நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் நீர்நிலைகளில் இன்று அதிகாலை முதலே மக்கள் கூட்டம் குவிந்த வண்ணம் இருந்தது. நெல்லை மாவட்டம் பாபநாசம் பாபநாசநாதர் சுவாமி கோவில் முன்பு உள்ள படித்துறையில் இன்று அதிகாலை முதலே பொதுமக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக குவிந்தனர்.

தர்ப்பணம்

அவர்கள் படித்துறையில் அமர்ந்து வாழை இலையில் அரிசி மாவால் பிண்டம் பிடித்து, வாழைப்பழம், வெற்றிலை, ஊதுபத்தி ஆகியவற்றை படைத்து சிறப்பு வழிபாடு நடத்தினர். பின்னர் அந்த பிண்டத்தை தாமிரபரணி ஆற்றில் கரைத்தனர். தொடர்ந்து தாமிரபரணி ஆற்றில் புனித நீராடினர்.

இதற்காக குடும்பத்தினருடன் கார்கள், வேன்களில் வந்து பெரும்பாலானோர் வந்திருந்தனர். ஏற்கனவே காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா நடைபெற்றதால் அங்கும் பஸ் போக்குவரத்து இருந்ததால் பாபநாசநாதர் சுவாமி கோவில் முன்பு வாகன போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

அதனை அங்கு காவல் பணியில் இருந்த போலீசார் சரி செய்தனர். இதேபோல் அம்பை, கல்லிடைக்குறிச்சி, சேரன்மகாதேவி உள்ளிட்ட இடங்களில் தாமிரபரணி நதிக்கரையில் ஏராளமானோர் தர்ப்பணம் கொடுத்தனர்.

போலீஸ் பாதுகாப்பு

நெல்லை மாநகர பகுதியில் டவுன் குறுக்குத்துறை, கொக்கி ரகுளம், வண்ணார்பேட்டை பேராத்து செல்வி அம்மன் கோவில் படித்துறை, குட்டத்துறை முருகன் கோவில் படித்துறை, அருகன்குளம் ஜடாயு தீர்த்தம் உள்ளிட்ட இடங்களில் பொதுமக்கள் தாமிரபரணி நதியில் நீராடி, பின்னர் தர்ப்பணம் கொடுத்து சென்றனர்.

இதனால் மாநகராட்சி சார்பில் பொதுமக்கள் வசதிக்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. அதேநேரத்தில் படித்துறை பகுதிகளில் மாநகர போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். தீயணைப்பு வீரர்களும் முன்எச்சரிக்கையாக பணியில் ஈடுபட்டிருந்தனர். மாவட்டத்தில் உவரி சுயம்புலிங்க சுவாமி கோவில் அமைந்துள்ள கடற்கரை பகுதிகளில் பொதுமக்கள் குடும்பத்தினருடன் வந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

தென்காசி

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் இன்று அதிகாலை முதலே அருவிக்கரைகளில் பொதுமக்கள் குவிந்தனர். மெயின் அருவியில் மிகவும் குறைந்த அளவே பாறையை ஒட்டியபடி தண்ணீர் விழுந்தது. ஆனாலும் குற்றாலம் அருவி கரையை சுற்றிலும் பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது. அவர்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக நீண்ட வரிசையில் நின்று புனித நீராடினர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர் கடற்கரையில் இன்று அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டனர். அவர்கள் கடலில் புனித நீராடி, வரிசையாக அமர்ந்திருந்த அர்ச்சகர்களிடம் முன்னோர்கள் பெயர் மற்றும் நட்சத்திரம் போன்ற விவரங்களை கூறி எள்ளும் தண்ணீரும் வைத்து தர்ப்பணம் செய்தனர். தூத்துக்குடி தெர்மல் நகர் புதிய துறைமுகம் பகுதியில் உள்ள கடற்கரையில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.


வண்ணார்பேட்டை பேராத்து செல்வி அம்மன் கோவில் ஆற்றில் ஆடி அமாவாசை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க திரண்ட பொதுமக்கள்.


 


Tags:    

Similar News