வடக்கநந்தல் அருகே சேரும், சகதியுமான சாலையில் நாற்று நட்ட பொதுமக்கள்: ஆதார், ரேஷன் அட்டைகளை ஒப்படைக்க முடிவு
- இங்குள்ள குன்று மேட்டுப்பகுதி தெருவில் 200 குடும்பங்கள் வசித்து வருகிறார்கள்.
- மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
கள்ளக்குறிச்சி:
கச்சிராயப்பாளையம் அருகே வடக்கநந்தல் பேரூராட்சிக்கு உட்பட்ட அக்கராயபாளையம் 17 வது வார்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இங்குள்ள குன்று மேட்டுப்பகுதி தெருவில் 200 குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். இப்பகுதியில் சாலை வசதிகள் இல்லாமல் மண்சாலையாகவே இருந்து வருகிறது. இதனால் தற்போது பெய்து வரும் மழையின் காரணமாக சாலை சேரும் சகதிமாக மாறியது. இதனால் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாமலும், வாகனங்களில் செல்ல முடியாமல் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.
சாலை வசதி அமைத்து தர வேண்டும் என வடக்கநந்தல் பேரூராட்சி நிர்வாகத்திடம் பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பாக பலமுறை மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதையடுத்து அப்பகுதி மக்கள் சேரும் சகதியுமாக இருந்த சாலையில் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலை வசதி அமைத்து தரவில்லை எனில், ஆதார் மற்றும் ரேஷன் அட்டைகளை பேரூராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்கவுள்ளதாகவும் பொதுமக்கள் கூறினர்.