போடி அருகே டாஸ்மாக் கடையை அகற்ற கோரி பொதுமக்கள் சாலை மறியல்
- குடிமகன்கள் தொல்லையால் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் அச்சம் அடைந்துள்ளனர்.
- டாஸ்மாக் கடையை அகற்றகோரி கிராம மக்கள் தார் சாலை அமைக்கும் பணியை நிறுத்தி மறியலில் ஈடுபட்டனர்.
மேலசொக்கநாதபுரம்:
தேனி மாவட்டம் போடி அருகே சன்னாசிபுரம் செட் அணைக்கரைப்பட்டி ஊராட்சிக் குட்பட்டதாகும். இங்கு ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் விவசாயத்தை பிரதானமாக செய்து வருகின்றனர். இப்பகுதியில் புதிதாக தார்சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.
சாலையோர ஆக்கிரமி ப்புகளை அகற்றாமல் சாலை அமைக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் தோட்டத்திற்கு செல்லும் வழியில் குடிமகன்கள் மது குடித்து அட்டகாசம் செய்து வருகின்றனர். இதனால் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் அச்சம் அடைந்துள்ளனர். மிகவும் அருகில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை.
இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் தார் சாலை அமைக்கும் பணியை நிறுத்தி மறியலில் ஈடுபட்டனர். சம்பவம் குறித்து அறிந்ததும் விரைந்து வந்த அணைக்கரை ப்பட்டி ஊராட்சி தலைவர் லோகநாதன், போடி போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் கலைந்து செல்லாததால் பரபரப்பு ஏற்பட்டது. டாஸ்மாக் கடை மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்றினால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என்றனர்.