உள்ளூர் செய்திகள்

பெரம்பலூர் அருகே 161 ஆண்டு பழமையான தேவாலயம் இடிப்பு

Published On 2022-08-08 09:54 GMT   |   Update On 2022-08-08 10:13 GMT
  • பெரம்பலூர் பாளையம் கிராமத்தில் 1861 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் பிரெஞ்சுக்காரர்களால் புனித சூசையப்பர் தேவாலயம் கட்டப்பட்டது.
  • 160 ஆண்டுகளுக்கு முன்பே இந்த தேவாலயம் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி கட்டப்பட்டுள்ளது.

பெரம்பலூர் :

பெரம்பலூர் மாவட்டம் பாளையம் கிராமத்தில் 1861 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் பிரெஞ்சுக்காரர்களால் புனித சூசையப்பர் தேவாலயம் கட்டப்பட்டது. இந்த தேவாலயம் 61 அடி உயரம் மற்றும் 8,800 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது.

கும்பகோணம் டையோசிசன் வாயிலாக இந்த தேவாலயம் நிர்வகிக்கப்பட்டு வந்தது. கடந்த 2009-ல் அதன் கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்து விட்டது. இதையடுத்து பாதுகாப்பு கருதி பொதுமக்கள் தேவாலயத்திற்குள் சென்று பிரார்த்தனை செய்வது நிறுத்தப்பட்டது. அதன் பின்னர் 2016-ல் அந்த தேவாலய வளாகத்தில் புதிய தேவாலயம் கட்டப்பட்டது.

தற்போது அப்பகுதியில் உள்ள நடுநிலைப்பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு கருதி பழமையான அந்த தேவாலயத்தை இடிக்க முடிவு செய்யப்பட்டது. 160 ஆண்டுகளுக்கு முன்பே இந்த தேவாலயம் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி கட்டப்பட்டுள்ளது. கட்டுமானம் வலுவாக இருப்பதால் இடிப்பது கடினமாக உள்ளது என பாதிரியார் ஜெயராஜ் தெரிவித்தார்.

இந்த தேவாலயத்தின் இரும்பு சிலை 150 ஆண்டுகளுக்கு முன்பு வெளிநாட்டிலிருந்து கொண்டுவரப்பட்டது. தற்போது புதுப்பிக்கப்பட்டு புதிய தேவாலயத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த டேனியல் பிரகாஷ் என்பவர் கூறும் போது, இந்த தேவாலயத்தை என்னால் மறக்க முடியாது. எனது தாத்தா முதல் மகன் வரை நான்கு தலைமுறைகளுக்கு பெயர் சூட்டும் விழா இங்குதான் நடந்தது. லட்சக்கணக்கான மக்களுக்கு ஞானஸ்தானம் இந்த தேவாலயத்தில் எடுக்கப்பட்டுள்ளது.

சிறுவயதில் எங்கள் நேரத்தை அதிகம் தேவாலயத்தில் செலவழித்துள்ளோம். தேவாலயம் மிகவும் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது அதை இடிப்பதை பார்க்கும்போது வருத்தமாக இருக்கிறது. இந்த தேவாலயத்தை பொருத்தமட்டில் எங்கள் நினைவில் என்றும் இருக்கும்.

இன்னொருவர் கூறும்போது இந்த தேவாலயம் நூற்றாண்டு விழாவை கொண்டாடியுள்ளது. இதனை புதுப்பிக்க முயற்சிகள் எடுத்தார்கள். ஆனால் செய்ய முடியவில்லை. இது எங்களுக்கு ஒரு தனிப்பட்ட இழப்பு ஆகும் என்றார்.

Tags:    

Similar News