பட்டா வழங்க கோரி நரிக்குறவர்கள் தர்ணா
- பட்டா வழங்க கோரி நரிக்குறவர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்
- 40 ஆண்டுகளாக விவசாயம் செய்யும் இடங்களுக்கு
பெரம்பலூர்:
பெரம்பலூர் அருகே உள்ள எறையூர் நரிக்குறவர் காலனி மக்கள், 40 ஆண்டுகளாக மாவட்ட நிர்வாகத்தின் வாய்மொழி உத்தரவின் பேரில் அரசு புறம்போக்கு நிலத்தில் விவசாயம் செய்து வருகின்றனர். தற்போது அந்த நிலத்திற்கு பட்டா வழங்க கோரி, அரை நிர்வாணத்துடன் பாலக்கரையிலிருந்து ஊர்வலமாக தி.மு.க. மாவட்ட கட்சி அலுவலகத்திற்கு சென்று, எம்.பி.ராசாவிடம் மனு அளித்தனர்.
மனுவினை பெற்றுக்கொண்ட ராசா, அரசு பதிவேட்டின் படி உள்ள 89 குடும்பங்களுக்கு தான் முதலமைச்சரிடம் பேசி ஒவ்வொரு குடும்பத்திற்கும் மூன்றரை சென்ட் வீட்டுமனை பட்டா மற்றும் விவசாயம் செய்வதற்கு ஒரு ஏக்கர் நிலத்திற்கு பட்டா வாங்கி தருவதாக உறுதியளித்தார்.
பின்னர் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் நிறுவன தலைவர் அய்யாக்கண்ணு, நரிக்குறவர்கள் நலச்சங்க மாநில தலைவர் காரைசுப்ரமணியன் ஆகியோர் தலைமையில் நரிக்குறவர்கள் ஊர்வலமாக கலெக்டர் அலுவலகம் சென்று அங்கு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா சம்பவஇடத்திற்கு வந்து நரிக்குறவர்களிடம் கோரிக்கை மனுவினை பெற்று இது சம்பந்தமாக அரசிடம் முறையிட்டு அரசிடமிருந்து என்ன உத்தரவு வருகிறதோ அதனை செய்து தருவதாக உறுதி அளித்ததன் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்.