கரூர் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு பிடி வாரண்ட்
- கரூர் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு பிடி வாரண்ட் பிரப்பிக்கப்பட்டது
- 3முறை சம்மன் அனுப்பப்பட்டு ஆஜராகவில்லை.
பெரம்பலூர்:
பெரம்பலூர் தலைமை குற்றவியல் கோர்ட்டில் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத போலீஸ் கரூர் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு வாரண்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, தழுதாழை அம்பேத்கார் நகரை சேர்ந்தவர் பெருமாள் மகன் செல்லதுரை (வயது45). அதே பகுதியை சேர்ந்தவர்கள் செல்வராஜ் மகன் பாஸ்கரன் (39). பெரியசாமி மகன் அருண்குமார். இதில் செல்லதுரைக்கும், பாஸ்கரனுக்கும் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்துள்ளது. இதில் ஏற்பட்ட தகராறில் பாஸ்கரன் கொடுத்த புகாரின்பேரில் அரும்பாவூர் போலீசார் வழக்குபதிந்து செல்லதுரையை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதில் கடந்த 2020ம் ஆண்டு ஜூன் மாதம் 17ம்தேதி ஜாமீனில் வெளியே வந்த செல்லதுரையை அவரது வீட்டு வாசலில் நின்றுக்கொண்டிருந்த போது பாஸ்கரன், அருண்குமார் ஆகியோர் உருட்டு கட்டையால் தாக்கினர். இதில் பாடுகாயமடைந்த செல்லதுரை பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இது குறித்து செல்லதுரை கொடுத்த புகாரின்பேரில் அரும்பாவூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலா வழக்குபதிந்து விசாரணை மேற்கொண்டார்.
இதுசம்பவத்தின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி செல்லதுரை பெரம்பலூர் மாவட்ட தலைமை குற்றவியல் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் விசாரணைக்காக செல்லதுரை வழக்கை பதிவு செய்த அரும்பாவூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலா சாட்சியமளிக்க கோர்ட்டில் ஆஜராகுமாறு 3 முறை சம்மன் அனுப்பட்டும் கோர்ட்டுக்கு வரவில்லை.
இந்நிலையில் நேற்று (22ம்தேதி) வழக்கு விசாரணையின் போது சாட்சியம் அளிக்க வராத அப்போதைய அரும்பாவூர் போலீஸ் இன்ஸ்பெக்டரும், தற்போது கரூர் மாவட்டம், மாயனூர் போலீஸ் இன்ஸ்பெக்டருமான கலாவிற்கு பிணையில் வரக்கூடிய வாரண்ட் பிறப்பித்தும், வரும் ஆகஸ்ட் 1ம்தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என தலைமை குற்றவியல் கோர்ட் நீதிபதி மூர்த்தி உத்தரவிட்டார்.