விளையாடியபோது விபரீதம்- எல்.இ.டி. பல்பு விழுங்கிய 10 மாத ஆண் குழந்தை
- விளையாட்டு பொருட்களில் பொருத்தப்பட்டு இருந்த சிறிய அளவிலான எல்.இ.டி. பல்பு குழந்தை கையில் வைத்திருந்த நிலையில் திடீரென வாயில் வைத்து விழுங்கியது.
- குழந்தை விழுங்கிய பல்பு உணவுக்குழாய்க்குள் செல்லாமல் மூச்சுக்குழாய்குள் சென்று விட்டதால் அறுவை சிகிச்சை மூலம் அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது.
தஞ்சாவூர்:
அரியலூர் மாவட்டம் செந்துறையை சேர்ந்தவர் சங்கர். இவர் செந்துறை அருகே உள்ள பொன்பரப்பியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி சபீதாபாரதி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
2-வது மகன் தமிழ்முகிலன். பிறந்து 10 மாதம் ஆகிறது.
இந்த நிலையில் வீட்டில் தமிழ்முகிலனுடன் அவனது சகோதரன் விளையாடிக்கொண்டு இருந்தான். அப்போது விளையாட்டு பொருட்களின் பொருத்தப்பட்டு இருந்த சிறிய அளவிலான எல்.இ.டி. பல்பு குழந்தை கையில் வைத்திருந்த நிலையில் திடீரென வாயில் வைத்து விழுங்கியது.
இதனை பார்த்த சிறுவன் தனது தந்தையிடம் கூறி உள்ளார். உடனடியாக பெற்றோர் குழந்தையை அரியலூரில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்சென்று காண்பித்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக டாக்டர்கள் அறிவுறுத்தலின் பேரில்தஞ்சையில் உள்ள எம்.ஆர். மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர்.
அங்கு குழந்தைக்கு பரிசோதனை செய்த நிலையில் 2 சிறிய கம்பிகள் நீட்டிக்கொண்டிருந்த நிலையில் எல்.இ.டி. பல்பு சிறுவன் விழுங்கியது தெரிய வந்தது.
இதையடுத்து அவனுக்கு 1 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து பல்பை டாக்டர்கள் வெளியே எடுத்தனர்.
குழந்தை அறுவை சிகிச்சை நிபுணர் மைக்கேல் தலைமையில் பொது மற்றும் புற்று நோய் அறுவை சிகிச்சை நிபுணர் ராஜீவ் மைக்கேல், குடல் அறுவை சிகிச்சை நிபுணர் மேத்யூ மைக்கேல், மயக்க மருந்து நிபுணர் குளாளன் ஆகியோர் இந்த அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்டனர். தற்போது குழந்தை நல்ல நிலையில் உள்ளது.
இது குறித்து டாக்டர்கள் கூறுகையில், குழந்தை விழுங்கிய பல்பு உணவுக்குழாய்க்குள் செல்லாமல் மூச்சுக்குழாய்குள் சென்று விட்டதால் அறுவை சிகிச்சை மூலம் அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது. பல்பு வெளியே எடுக்கப்பட்ட பின்னர் குழந்தை நன்றாக மூச்சு விடுகிறது என்றனர்.
குழந்தையின் தந்தை சங்கர் கூறுகையில், மூச்சு விட முடியாமல் அவதிப்பட்ட நிலையில் எனது குழந்தையை இங்கு கொண்டு வந்து சேர்த்தோம். டாக்டர்கள் உரிய சிகிசை அளித்ததால் எனது குழந்தையின் உயிர் திரும்ப கிடைத்துள்ளது என்றார்.