அழுகிய நிலையில் இளம்பெண் உடல் கேரள போலீசார் ஒத்துழைப்பு இல்லாததால் நீடிக்கும் சிக்கல்
- போடியில் இருந்து மூணாறு செல்லும் சாலையில் கட்டைப்பாலம் என்ற பகுதியில் கடந்த 5 நாட்களுக்கு முன்பு அழுகிய நிலையில் இளம்பெண் உடல் மீட்கப்பட்டது.
- கேரள போலீசாரிடம் போதிய ஒத்துழைப்பு இல்லாததால் கண்டுபிடிக்க முடியவில்லை. தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம் என்று தெரிவித்தனர்.
மேலசொக்கநாதபுரம்:
தேனி மாவட்டம் போடியில் இருந்து மூணாறு செல்லும் சாலையில் கட்டைப்பாலம் என்ற பகுதியில் கடந்த 5 நாட்களுக்கு முன்பு அழுகிய நிலையில் இளம்பெண் உடல் மீட்கப்பட்டது. இதுகுறித்து குரங்கனி போலீசாருக்கு தகவல் கிடைத்ததின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை அதேஇடத்தில் டாக்டர்களை வரவழைத்து பிரேத பரிசோதனை நடத்த முடிவு செய்தனர்.
மேலும் இறந்த பெண்ணின் உடல் உறுப்புகள் டி.என்.ஏ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இறந்தவர் யார், எந்த ஊர் என்ற விபரம் தெரியவில்லை. இதனிடையே காணாமல் போன பெண்கள் பற்றிய விபரம் சேகரிக்கப்பட்டு வந்தது. இதனிடையே போடியை சேர்ந்த ஒருவாலிபர், கேரளாவை சேர்ந்த இளம்பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இறந்த பெண் அவராக இருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில் அவரது செல்போன் எண்ணை டிரேஸ்அவுட் செய்ததில் கொச்சி விமானநிலையத்தில் அவரது செல்போன் இணைப்பு துண்டிக்கப்பட்டது தெரியவந்தது. இதனைதொடர்ந்து அந்த பெண்ணின் பெற்றோரிடம் டி.என்.ஏ பரிசோதனை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.
மேலும் கடந்த 10 நாட்களுக்கு முன்பு கேரளாவை சேர்ந்த வாலிபர்கள் இளம்பெண்களுடன் சுற்றுலாவுக்கு வந்ததும், அவர்கள் மதுபோதையில் இதேஇடத்தில் ஆடிப்பாடியதாகவும் அப்பகுதி பொதுமக்கள் போலீசாரிடம் தெரிவித்தனர். இதனால் அவர்கள் யார் என்ற கோணத்திலும் சி.சி.டி.வி காட்சிகளை வைத்து ஆராய்ந்து வருகின்றனர்.
இந்த வழக்கில் போடி டி.எஸ்.பி தலைமையில் ஒரு தனிப்படை, குற்றப்பிரிவு போலீசார் உள்பட 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு இறந்த பெண் யார், அவர் எவ்வாறு இறந்தார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தியும் எவ்வித தடயமும் சிக்கவில்லை. இதுகுறித்து போலீசாரிடம் கேட்டபோது இறந்த பெண் கேரளாவை சேர்ந்தவராக இருக்கலாம் என்று சந்தேகப்படுகிறோம். ஆனால் இதுகுறித்து கேரள போலீசாரிடம் போதிய ஒத்துழைப்பு இல்லாததால் கண்டுபிடிக்க முடியவில்லை. இருந்தபோதும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம் என்று தெரிவித்தனர்.