காரைக்கால் புதிய பஸ் நிலையம் எதிரே சாலையை கடக்க முடியாமல் தவித்த முதியவருக்கு உதவிய போலீசார்
- அவர் மாற்றுத்திறனாளி என்பதும், தன்னால் உடனடியாக சாலையை கடக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
- பரவி வரும் வீடியோவால் போக்குவரத்து போலீ சாருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.
புதுச்சேரி:
காரைக்கால் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள போக்குவரத்து சிக்னலில், முதியவர் ஒருவர் சாலையைக் கடக்க முடியாமல் வெகு நேரமாக சாலையில் நடுவே காத்திருந்தார். போக்குவரத்தை சரி செய்யும் பணியில் இருந்த போக்குவரத்து போலீசார் மகேஸ்வரன், இதைப் பார்த்து அந்த முதியவர் அருகில் சென்று விசாரித்த பொழுது, அவர் மாற்றுத்திறனாளி என்பதும், தன்னால் உடனடியாக சாலையை கடக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
அதனை தொடர்ந்து போக்குவரத்து போலீசார் மகேஸ்வரன், உடனடியாக அருகில் இருந்த ஒருவரின் உதவியுடன், அந்த முதியவரை கை தாங்கலாக, தூக்கிச் சென்று சாலையை கடக்க உதவி செய்தார். இதை அருகில் இருந்தவர்கள் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளனர். சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் வீடியோவால் போக்குவரத்து போலீ சாருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.