தி.நகர் நடேசன் பூங்கா அருகே ஆதரவின்றி தவித்த மூதாட்டியை மீட்ட போலீசார்
- மாம்பலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் மற்றும் போலீசார் மூதாட்டியை மீட்க நடவடிக்கை எடுத்தனர்.
- 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு மூதாட்டிக்கு மருத்துவ பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.
சென்னை:
சென்னை தி.நகர் நடேசன் பூங்கா அருகே மூதாட்டி ஒருவர் ஆதரவின்றி தவித்தார். அவரால் நடக்க முடியவில்லை. கையில் சிறிய கைத்தடியை அவர் வைத்திருந்தார். இது பற்றி அந்த வழியாக சென்றவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதைதொடர்ந்து மாம்பலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் மற்றும் போலீசார் மூதாட்டியை மீட்க நடவடிக்கை எடுத்தனர். இதையடுத்து போலீஸ் ஏட்டு தேசிங்கு அங்கு விரைந்து சென்றார். அவர் மூதாட்டிக்கு சாப்பாடு வாங்கி கொடுத்து உதவி செய்தார். பின்னர் 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு மூதாட்டிக்கு மருத்துவ பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.
அவரது ஆக்சிஜன் மற்றும் சர்க்கரை அளவு பரிசோதனை செய்யப்பட்டது. இரண்டும் சரியான அளவில் இருந்தது. இதையடுத்து ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மூதாட்டியை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்ல தேவை இல்லை என்று தெரிவித்தனர். இதனால் மூதாட்டியை போலீசார் காப்பகத்தில் சேர்க்க முடிவு செய்தனர். இதன்படி வடபழனியில் உள்ள காப்பகத்தில் மூதாட்டி சேர்க்கப்பட்டார். போலீசாரின் இந்த சேவையை பொதுமக்கள் பாராட்டினர்.