உள்ளூர் செய்திகள்

பொன்னேரி அரசு மருத்துவமனையில் போதிய டாக்டர்கள் இல்லாததால் நோயாளிகள் கடும் அவதி

Published On 2022-12-18 08:34 GMT   |   Update On 2022-12-18 08:34 GMT
  • பொன்னேரியை சுற்றியுள்ள கிராமங்களில் வைரஸ் காய்ச்சல் பாதிப்பு இந்த வருடம் அதிகமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.
  • அரசு ஆஸ்பத்திரிகளில் காய்ச்சல் வார்டுகளில் தினமும் நூற்றுக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

பொன்னேரி:

பொன்னேரி மற்றும் அதனை சுற்றியுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து தினந்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நோயாளிகள் பொன்னேரி அரசு பொது மருத்துவமனைக்கு வருகிறார்கள்.

காய்ச்சல் இருமல், சளி, பிரசவம், எக்ஸ்ரே ஸ்கேன், பல் சிகிச்சை, விபத்து, அறுவை சிகிச்சை, டயாலிசிஸ், பொது மருத்துவம் உள்ளிட்ட பல நோய்களுக்கு உள்நோயாளியாகவும் வெளிநோயாளியாகவும் ஏராளமானோர் வந்து செல்வதுண்டு.

இந்நிலையில் பொன்னேரி, மீஞ்சூர், சோழவரம், திருப்பாலைவனம், பழவேற்காடு பகுதிகளில் வைரஸ் காய்ச்சல், புளூ காய்ச்சல் உள்ளிட்ட பருவ கால நோய் தொற்றுகள் அதிகரித்து வருகின்றன.

மழைக்காலம் தொடங்கிய அக்டோபர் மாதத்தில் குறைவாக இருந்த பாதிப்பு தற்போது அதிகரித்துள்ளது. மழை, பனி, குளிர் போன்றவற்றால் வைரஸ் தொற்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தாக்கி வருகிறது. காய்ச்சல், உடல் வலி, இருமல், சளி போன்றவை இதன் அறிகுறியாக இருந்தாலும் தொண்டை வலியும் அதிகமாக உள்ளது.

பொன்னேரியை சுற்றியுள்ள கிராமங்களில் வைரஸ் காய்ச்சல் பாதிப்பு இந்த வருடம் அதிகமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். அரசு ஆஸ்பத்திரிகளில் காய்ச்சல் வார்டுகளில் தினமும் நூற்றுக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

மேலும் தனியார் மருத்துவமனைகள், கிளினிக்குகளில் கூட்டம் அதிகளவில் உள்ளது. குறிப்பாக சிறு குழந்தைகள் அதிகளவில் பாதிக்கப்பட்டு இருப்பதை காணமுடிகிறது. வழக்கமாக மீஞ்சூர், பொன்னேரி பகுதிகளில் இரவு 10 மணி வரை செயல்படக்கூடிய கிளினிக்குகள் இப்போது கூட்டம் குவிவதால் நள்ளிரவு வரை செயல்படுகிறது.

குறிப்பாக பொன்னேரி அரசு மருத்துவமனையில் பொது மருத்துவ வெளி நோயாளி சிகிச்சை பிரிவில் போதிய மருத்துவர்கள் இல்லாததால் அதிகமாக கூட்டம் காணப்படுவதாகவும் குறிப்பிட்ட நேரம் முடிந்தவுடன் மருத்துவர்கள் சென்று விடுவதால் நோயாளிகள் மருத்துவரை பார்க்க முடியாமல் அவதிப்பட்டு திரும்பி விடுவதாகவும் தனியார் மருத்துவமனையை நாடுவதாகவும் நோயாளிகள் தெரிவித்தனர். இதனை கருத்தில் கொண்டு சுகாதாரத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News