உள்ளூர் செய்திகள்

தெங்குமரஹாடா மாயாற்றில் வெள்ளப்பெருக்கு- பரிசல் இயக்க முடியாததால் பொதுமக்கள் அவதி

Published On 2024-07-16 04:45 GMT   |   Update On 2024-07-16 04:46 GMT
  • மழைக்காலங்களில் மாயாற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு விடும்.
  • பரிசலை முற்றிலும் இயக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

சத்தியமங்கலம்:

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்துள்ள பவானிசாகர் வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் தெங்குமரஹாடா மலை கிராமம் உள்ளது. இந்த மலை கிராமத்தை சென்றடைய மாயாற்றை கடக்க வேண்டும்.

மலை கிராமத்தில் வசிக்கும் வியாபாரிகள், பள்ளி மாணவ-மாணவிகள், கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் மாயாற்றை பரிசல் மூலம் கடந்து சத்தியமங்கலம் வந்து செல்வது வழக்கம். மழைக்காலங்களில் மாயாற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு விடும். அந்த சமயம் ஆபத்தை உணராமல் பரிசலில் மக்கள் சென்று வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக நீலகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மாயாற்றில் கடந்த 2 நாட்களாக நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

இன்று காலை மாயாற்றில் 10 ஆயிரம் கனஅடி நீர்வரத்தானதால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இரு கறைகளையும் தொட்டபடி நீர் ஆர்ப்பரித்து செல்கிறது. இதனால் இன்று மாயாற்றில் பரிசல் இயக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் பரிசலை முற்றிலும் இயக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இன்று காலை பள்ளி, கல்லூரிக்கும் மாணவர்கள் மற்றும் வியாபாரத்துக்கு செல்லும் மக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர்.

இதனால் தெங்குமரஹாடா, அல்லி மாயார் பொதுமக்கள் தங்கள் அன்றாட தேவைகளுக்கு வெளியே வர முடியாது நிலை ஏற்பட்டுள்ளது. மாயாற்றில் நீண்ட வருடமாக தொங்கு பாலம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். தற்போதும் தொங்கு பாலம் அமைக்க வேண்டும் என மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News