மழையூர் கிராம நிர்வாக அலுவலகம், ரேசன் கடையில் கலெக்டர் மெர்சி ரம்யா திடீர் ஆய்வு
- மழையூர் கிராம நிர்வாக அலுவலகம், ரேசன் கடையில் கலெக்டர் மெர்சி ரம்யா திடீர் ஆய்வு மேற்கொண்டார்
- நகராட்சி பூங்காவை பராமரிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி வட்டம், மழையூர் கிராம நிர்வாக அலுவலகம் மற்றும் நியாய விலைக்கடையினை, மாவட்ட கலெக்டர் ஐ.சா.மெர்சி ரம்யா ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது, பட்டா வழங்கப்பட்ட விபரங்கள் முறையாக கணினியில் பதிவேற்றம் செய்யப்படுகிறதா என்பதையும் கிராம நிர்வாக அலுவலர்கள் பணிகள் குறித்தும் மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்தார். மேலும் மழையூர் கிராம அங்காடியில் பொருட்களின் இருப்பு விபரத்தினையும், மின் அலுவலகத்தின் செயல்பாடுகளையும் ஆய்வு செய்தார்.
பின்னர் கறம்பக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆய்வு செய்த மாவட்ட கலெக்டர் இ-சேவை மைய செயல்பாடுகள் குறித்தும் வட்டாட்சியர் அலுவலக பதிவேடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் 11, 12 ஆம் வகுப்புகளில் இடை நின்ற மாணவர்களிடம், அவர்களின் பெற்றோர்களிடமும் மாவட்ட கலெக்டர் தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாளாக இருப்பதால் தவறாமல் விண்ணப்பித்து தேர்வு எழுத வேண்டும் எனவும் 12 ஆம் வகுப்பு என்பது வாழ்க்கைக்கு மிகவும் அவசியமான அடித்தளமாக அமையக்கூடிய கல்வி எனவும் மாணவர்களிடம் மாவட்ட கலெக்டர் ஐ.சா.மெர்சி ரம்யா அறிவுறுத்தினார்.
அதனைதொடர்ந்து, புதுக்கோட்டை நகராட்சியில் ஒட்டக்குளத்தை பார்வையிட்டும், கழிவுநீர் சுத்திகரிப்பு மையத்தின் செயல்பாடுகளை நேரில் பார்வையிட்டும் மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்தார். மேலும் புதுக்கோட்டை நகராட்சி கலைஞர் கருணாநிதி மகளிர் கலைக்கல்லூரி எதிரில் ரூ.9 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் நகராட்சி பூங்காவின் பணிகளை பார்வையிட்ட மாவட்ட கலெக்டர் ஐ.சா.மெர்சி ரம்யா பணிகளை நல்ல முறையில் விரைந்து முடிக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின் போது வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், நகர்மன்ற தலைவர் திலகவதி செந்தில், ஒன்றிய குழு தலைவர் மாலா ராஜேந்திரதுரை, நகர்மன்ற துணைத்தலைவர் லியாகத்அலி, முதன்மை கல்வி அலுவலர் மஞ்சுளா, நகராட்சி ஆணையர் (பொ) பாலாஜி, வட்டாட்சியர்கள் ராமசாமி, விஜயலெட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.