விராலிமலை அருகே மதுபான ஆலை கழிவுகள் ஆற்றில் கலப்பதை தடுக்க ஆய்வு-அமைச்சர் மெய்யநாதன் தகவல்
- விராலிமலை அருகே உள்ள தனியார் மதுபான ஆலையில் இருந்து ஆற்றில் கழிவு நீர் திறந்துவிடப்படுவது குறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மூலம் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்
- கூடங்குளத்தில் உள்ள அணுக்கழிவுகளை அகற்றித் தர வேண்டும் என மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார்.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வக்கீல்களின் சிறப்பான வாதத்தால் தடை நீக்கப்பட்டதால் ஜல்லிக்கட்டு பேரவை, ஆர்வலர்கள் சார்பில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு விழா புதுக்கோட்டையில் வருகிற 5-ந் தேதி நடைபெற உள்ளது. இதற்காக இடையப்பட்டி அருகே உள்ள இடத்தில் பிரமாண்ட பந்தல் மேடை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெறுகிறது. இதனை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் நேற்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது தி.மு.க. நிர்வாகிகள் உடன் இருந்தனர். இந்த நிலையில் முதல்-அமைச்சர் வருகையையொட்டி விழா நடைபெறும் இடத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் அமைச்சர் மெய்யநாதனுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது போலீஸ் அதிகாரிகளும் உடன் இருந்தனர். பின்னர் அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக் கழிவுகளை அகற்றிக் கொள்ள தங்களுக்கு அனுமதிக்க வேண்டும் என ஆலை நிர்வாகம் தமிழக அரசிடம் அனுமதி கோரியது.
ஆனால் அதை தமிழக அரசே அகற்றும் என முதல்வர் அறிவித்துள்ளார்.இதற்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் முதல்வருக்கு பாராட்டையும், நன்றியையும் தெரிவித்துள்ளனர். கூடங்குளத்தில் உள்ள அணுக்கழிவுகளை அகற்றித் தர வேண்டும் என மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார். ஏனெனில், அரசின் வழிகாட்டு நெறிமுறைப்படி அதை தமிழக அரசு அகற்ற இயலாது. மீண்டும் மஞ்சள் பை திட்டத்தின் மூலம் துணைப்பையின் பயன்பாடு 25 சதவீதத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது.ஆனாலும், ஆங்காங்கே தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு இருக்கிறது.
விரைவில் அதையும் கட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பிளாஸ்டிக் தயாரிக்கும் நிறுவனங்கள் அனைத்தையும் மூடி சீல் வைக்கப்பட்டுள்ளது. ஆனால், பிற மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்பட்டுதான் தமிழகத்தில் புழக்கத்தில் விடப்படுகிறது. விராலிமலை அருகே உள்ள தனியார் மதுபான ஆலையில் இருந்து ஆற்றில் கழிவு நீர் திறந்துவிடப்படுவது குறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மூலம் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். இதனால் காவிரி குண்டாறு திட்டப் பணிகளில் தொய்வு இருக்காது. அதன் வழித்தடமும் மாற்றி அமைக்கப்படாது. இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.