மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவி
ஆலங்குடி,
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள திருவரங்குளத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவி தொகை வழங்கும் விழா நடைபெற்றது.
விழாவில் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு காசோலைகளை வழங்கி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் பேசுகையில்,
தமிழக முதலமைச்சர் பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதன் ஒரு பகுதியாக இன்று திருவரங்குளத்தில் 2 ஊராட்சி அமைப்பு அளவிலான குழு கூட்டமைப்புகளுக்கு தலா ரூ.50 லட்சம் ரூபாய் வீதம் ஒரு கோடி மதிப்பிலான காசோலையும், மேலும் 40 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.2.20 கோடி மதிப்பிலான கடன் உதவி தொகையும் மொத்தம் ரூ.3.20 கோடி மதிப்பிலான கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.
இதேபோல் தமிழகத்தில் நகரம், கிராமம் என அனைத்து பகுதிகளிலும் பெண்கள் முன்னேறும் வகையில் சிறப்பான திட்டங்களை வரையறுத்து அதனை நிறைவேற்றி வர முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் நிறைவேற்றப்படும் திட்டங்கள் பொதுமக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதாக இருப்பதால் இத்திட்டங்களை இந்தியாவில் உள்ள வேறு மாநிலங்களும் செயல்படுத்த தொடங்கியுள்ளது. நல்ல ஆட்சிக்கு அறிகுறியாக முதல்-அமைச்சர் மாதம் தோறும் திட்டங்களை செயல்படுத்தி பொதுமக்களுக்கு துணையாக இருந்து வருகிறார் என்றார்.
நிகழ்ச்சியில் திருவரங்குளம் ஒன்றிய சேர்மன் வள்ளியம்மை, உதவி திட்ட அலுவலர்கள் தில்லைமணி, சசிகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கோகுல கிருஷ்ணன், ஆயிஷா ராணி, ஒன்றிய செயலாளர் வடிவேல், சுற்றுச்சூழல் அணி மாவட்டத் துணை அமைப்பாளர் வீரசெல்வம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.