உள்ளூர் செய்திகள்

விளைபொருட்கள் விலை வீழ்ச்சி- விவசாயிகள் நஷ்டத்தை தவிர்க்க விலை நிர்ணய ஆணையம் தேவை: ராமதாஸ்

Published On 2023-05-01 09:20 GMT   |   Update On 2023-05-01 09:20 GMT
  • விலை வீழ்ச்சியிலிருந்து உழவர்களை பாதுகாக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் தமிழ்நாடு அரசுக்கு உண்டு.
  • தக்காளி சாறு தயாரிப்பதற்கான நடமாடும் ஆலைகளை அமைக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சென்னை:

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழ்நாட்டில் தக்காளி, கத்தரிக்காய் போன்ற காய்கறிகளின் விலை கடும் வீழ்ச்சியடைந்திருப்பதால் அவற்றை உழவர்கள் சாலையோரங்களிலும், குப்பை மேடுகளிலும் கொட்டுவதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. காய்கறிகளுக்கு நல்ல விலை கிடைக்காதபோது அவை குப்பையில் கொட்டப்படுவது வழக்கமான ஒன்றாகிவிட்ட நிலையில், அச்சிக்கலுக்கு இன்னும் தீர்வு காணப்படாதது வேதனையளிக்கிறது.

விலை வீழ்ச்சியிலிருந்து உழவர்களை பாதுகாக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் தமிழ்நாடு அரசுக்கு உண்டு. காய்கறிகளுக்கு கொள்முதல் விலை நிர்ணயிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை தமிழகத்தை இப்போது ஆளும் தி.மு.க.வும் ஏற்றுக்கொண்டிருக்கிறது; கடந்த காலங்களில் வலியுறுத்தியுள்ளது. எனவே, இனியும் காலம் கடத்தாமல் வேளாண் விளைபொருட்களுக்கு நியாயமான விலை கிடைப்பதற்காக வேளாண் விளைபொருள் விலை நிர்ணய ஆணையத்தையும், விளைபொருட்களை அரசே கொள்முதல் செய்வதற்கு விளைபொருள் கொள்முதல் வாரியத்தையும் அமைக்க வேண்டும். அத்துடன் வேளாண் விளைபொருட்கள் அதிகமாக விளையும் காலங்களில் அவற்றை சேமித்து வைப்பதற்காக குளிர்பதனக் கிடங்குகளை அமைக்கவும், தக்காளி சாறு தயாரிப்பதற்கான நடமாடும் ஆலைகளையும் அமைக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News