மத்திய அரசு விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
- மனிதாபிமானம் மிக்க பணிகளை செய்து மனித உயிர்களை காப்பாற்றிய நபர்கள் தகுதியானவர்கள்
- கலெக்டர் தகவல்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
மத்திய அரசின் உள்துறை சார்பில் தைரியமான மற்றும் மனிதாபிமானம் மிக்க பணிகளை செய்து உயிர் காக்கும் முயற்சியில் ஈடுபட்டு மனித உயிர்களைக் காத்த நபர்களுக்கு சர்வோதம் ஜீவன் ரக்ஷா பதக், உத்தம் ஜீவன் ரக்ஷா பதக் மற்றும் ஜீவன் ரக்ஷா பதக் ஆகிய தொடர் விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது.
தைரியம் மிகுந்த மற்றும் மனிதாபிமானம் மிக்க பணிகளை தாமதம் இன்றி உடனடியாக செய்து தனது அசாத்திய திறமைகளால் நீரில் மூழ்கியவர்கள், நிலச்சரிவு, விபத்து மற்றும் நெருப்பில் சிக்கி காயம் அடைந்தவர்கள், மின்சார சாதனங்களால் தாக்கப்பட்டு பாதிப்பு ஏற்பட்டவர்கள், விலங்கினால் தாக்கப்படுபவர்கள் மற்றும் சுரங்கத்தில் வேலை செய்யும் போது ஏற்படும் விபத்துகளில் சிக்கியவர்களை உயிர் காக்கும் முயற்சியில் ஈடுபட்ட தீர செயல்கள் புரிந்தவர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகிறது.
இவ்விருதுக்கு விண்ணப்பிக்கும் விதிமுறைகள் 1.10.2020 முதல் தற்போது வரையிலான காலத்திற்குள் ஆற்றிய வீர சேவையை தெளிவுபடுத்தி உள்ளடக்கிய கருத்துக்கள், நாளிதழ்களில் வெளிவந்த செய்தி குறிப்புகள் போன்ற சான்றுகளுடன் சமர்ப்பிக்க வேண்டும். 1.10.20-க்கு முந்தைய வீர தீர சாதனைகள் கணக்கில் கொள்ளப்பட மாட்டாது.
விபத்துக்கள், ஆபத்து காலங்கள் மற்றும் இயற்கை பேரழிவுகள் போன்ற தருணங்களில் மனித உயிர்க்காத்த ராணிப்பேட்டை மாவட்டத்தில் வசிக்கும் அனைத்து வகையான பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் இவ்விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.ஆயுத ப்படை பிரிவு, காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணி சேவை துறையினர் ஆகியோர் தம்முடைய பணி நேரத்தின்போது அல்லாமல் இத்தகைய சேவை புரிந்திருந்தால் அவர்களும் விண்ணப்பிக்கலாம்.
மத்திய அரசின் உள்துறை சார்பில் தரப்படும் இவ்விருது பெற தகுதியானவர்களைபாரதப் பிரதமர் மற்றும் பாரத தேசத்தின் ஜனாதிபதி ஆகியோருக்கு உயர் விருதுக்கு குழு பரிந்துரைக்கும்.விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க கடைசி நாள் 10.8.22.இவ்வாறு கூறப்பட்டிருந்தது.