- பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்
- கரும்பு அறுவடை செய்ய ஒரு டன்னுக்கு ரூ.2 ஆயிரத்திற்கும் மேல் செலவாகிறது
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கி, விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளுக்கு பதிலளித்து பேசினார்.
பல்வேறு பகுதிகளி லிருந்து வந்திருந்த விவசாயிகள், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு, மாவட்டத்தில் நீர்நிலை களில் ஆக்கிரமிப்புகள் அகற்ற வேண்டும், நூறு நாள் வேலை திட்ட பணியாளர்களை விவசாய பணிக்கு அனுப்ப வேண்டும்.
கரும்பு அறுவடை செய்ய ஒரு டன்னுக்கு ரூ.2 ஆயிரத்திற்கும் மேல் செலவாகிறது. எனவே ஒரு டன்னுக்கு கொள்முதல் விலையாக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். சோளிங்கர் ஒன்றியம் மருதாலம்-ஜம்புகுளம் இடைப்பட்ட மையப்பகுதியில் துணை வேளாண் விரிவாக்க மையம் அமைக்க வேண்டும்.
வள்ளுவம்பாக்கம் கிராமத்தில் கால்நடை மருந்தகம் அமைக்க வேண்டும்.ஏரிகளிலிருந்து மண் எடுக்க முறையான அறிவிப்புகள் இல்லை. மண் எடுப்பதற்கான அனுமதி வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
இதில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) திலகவதி, துணை இயக்குநர் (தோட்டக்கலை) லதா மகேஷ், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் தேவிபிரியா உள்பட விவசாயிகள், துறைசார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.