செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் மறியல்
- 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
- போலீசார் பேச்சுவார்த்தை
அரக்கோணம்:
அரக்கோணம் அடுத்த தக்கோலம் அருந்ததிபாளையத்தில் சுமார் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இப்பகுதியில் வசிக்கும் ஒருவர் தனது வீட்டுமனை யில் செல்போன் டவர் அமைக்க தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் போட்டுள்ளார். இதனால் ஊழியர்கள் டவர் அமைக்கும் ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கியதாக கூறப்படுகிறது.
செல்போன் டவர் அமைப்பதால் குழந்தை முதல் பெரியவர்கள் வரை பாதிக்கப்படுவார்கள் எனக்கூறி அப்பகுதியை சேர்ந்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர், வருவாய் கோட்டாட்சியர், தாசில்தார், பேரூராட்சி நிர்வாகம் மற்றும் போலீசாரிடம் கடந்த மாதம் மனு அளித்துள்ளனர்.
சாலை மறியல்
அந்த மனுவின் மீது எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிகிறது. இந்த நிலையில் ஊழியர்கள் இரவோடு இரவாக டவர் அமைக்கும் பணியை தொடங்கி உள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இன்று காலை தக்கோலம்-பேரம்பாக்கம் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
அரசு, தனியார், தொழிற்சாலை, பள்ளி, கல்லூரி வாகனங்கள் செல்ல முடியாமல் அவதிப்பட்டன. காலை நேரம் என்பதால் இருபுறமும் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அரக்கோணம் போலீஸ் ஏஎஸ்பி அசோக் கீரிஷ் மறியலில் ஈடுபட்ட வர்களுடன் சமரச பேச்சு வார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதையடுத்து கிராம மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இந்த சாலை மறியலால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.