உள்ளூர் செய்திகள் (District)

கிராமப்புற மக்களுக்கு உதவுவதற்காக மைக்ரோ ஏ.டி.எம்.களாக மாறும் ரேசன் கடைகள்

Published On 2024-09-30 07:07 GMT   |   Update On 2024-09-30 07:07 GMT
  • தமிழகத்தில் நடைமுறைப் படுத்த திட்டமிட்டுள்ளார்கள்.
  • ரூ.1000 முதல் 2 ஆயிரம் வரை பரிவர்த்தனை செய்து கொள்ள முடியும்.

சென்னை:

ரேசன் கடைகளுடன் இணைந்து வங்கி சேவைகளையும் சாதாரண மக்களுக்கு வழங்கும் வகையில் புதியத் திட்டம் ஒன்றை தமிழகத்தில் நடைமுறைப் படுத்த திட்டமிட்டுள்ளார்கள்.

அரசு வழங்கும் ஓய்வூதியங்கள், பொங்கல் பரிசு போன்ற பல்வேறு நலத்திட்ட உதவிகள் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக செலுத்தப்படுகிறது.

இந்த பயனாளிகள் தங்கள் கணக்கில் இருக்கும் பணத்தை டெபிட் கார்டுகள் மூலம் ஏ.டி.எம்.களில் இருந்து எடுத்துக் கொள்ளலாம்.

ஆனால் பல கிராமங்களில், மலைப் பகுதிகளில் ஏ.டி.எம்.கள் வசதி இல்லை. எனவே வங்கி சேவைகளை எளிதில் யாரும் பெற முடியவில்லை.


அதே நேரம் 2014 முதல் பொங்கல் பரிசுத் தொகை சுமார் 33 ஆயிரம் ரேசன் கடைகள் மூலம் சிரமமில்லாமல் வழங்கப்படுகிறது. 5 ஆயிரத்து 604 கோடி பணத்தையும் விநியோகித்துள்ளது.

தற்போது எளிதில் வங்கி ஏ.டி.எம்.களை அணுக முடியாத கிராமப்புற மக்களுக்கு உதவுவதற்காக ரேசன் கடைகளை டிஜிட்டல் முறையில் பணப்பட்டுவாடா செய்யும் மைக்ரோ ஏ.டி.எம். களாகவும் மாற்றுவதற்கான பணிகள் தொடங்கி இருக்கிறது.

கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுப்பையன் கூறும் போது, ஏற்கனவே தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் 4,500 அலகுகளில் 3,500 அலகுகள் மைக்ரோ ஏ.டி.எம்.களாக மாற்றப்பட்டு உள்ளன என்றார்.

ரேசன் கடைகள் மைக்ரோ ஏ.டி.எம்.களாக மாறும்போது ஆதார் எண் அடிப்படையில் ஆயிரம் ரூபாய் முதல் 2 ஆயிரம் ரூபாய் வரை பரிவர்த்தனை செய்து கொள்ள முடியும்.

அரசு புள்ளி விவரம்படி 34 லட்சம் பேர் முதியோர் உதவித்தொகை மாதம் ரூ.1000 பெறுகிறார்கள். அவர்களில் 2.7 லட்சம் பேர் வங்கிகள் மற்றும் தபால் நிலையங்கள் வழியாக பணம் பெறுகிறார்கள். அவர்களால் ஏ.டி.எம்.களை பயன்படுத்த முடியவில்லை.

இந்த பயனாளிகள் இணையதள இணைப்புகள் கிடைப்பதில் இருக்கும் சிக்கல்கள், அதேபோல் கையடக்க கருவிகளில் பயோ மெட்ரிக் அங்கீகாரத்தை பெறுவதில் ஏற்படும் சிக்கல்களால் சிரமத்தை சந்திக்கிறார்கள்.

இந்த புதிய நடைமுறையில் கிராமப்புற மக்களும் ரேசன் கடை ஏ.டி.எம்.கள் மூலம் பண சேவையை பெற முடியும்.

Tags:    

Similar News