உள்ளூர் செய்திகள்

ஆர்.பி.உதயகுமார் ஆதரவாளர்கள் மீது அ.ம.மு.க. நிர்வாகிகள் சரமாரி தாக்குதல்- 3 பேர் படுகாயம்

Published On 2024-11-11 07:38 GMT   |   Update On 2024-11-11 07:38 GMT
  • அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர்களை ஆர்.பி.உதயகுமார் நேரில் சந்தித்து நடந்த சம்பவங்களை கேட்டறிந்தார்.
  • உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என்று மருத்துவர்களிடம் கேட்டுக் கொண்டார்.

மதுரை:

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை அடுத்த சேடபட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட அத்திபட்டியில் அ.தி.மு.க. சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலை வருமான ஆர்.பி.உதயகுமார் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் டி.டி.வி.தினகரன் மற்றும் ஓ.பன்னீர்செல்வம் குறித்து விமர்சனம் செய்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஆலோசனை கூட்டம் முடிந்து தனது ஆதரவாளர்களுடன் 5-க்கும் மேற்பட்ட வாகனங்களில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் திருமங்கலம் நோக்கி புறப்பட்டார். பேரையூர்-உசிலம்பட்டி இடையிலான மங்கள்ரேவு பகுதியில் அவரது கார் வந்தபோது சாலை ஓரத்தில் நின்றிருந்த 10-க்கும் மேற்பட்ட அ.ம.மு.க.வினர் ஆர்.பி.உதயகுமாருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அப்போது உதயகுமாருடன் சேர்ந்து 4 கார்கள் அந்த பகுதியை கடந்து சென்றுவிட்ட நிலையில் முன்னாள் எம்.எல்.ஏ. மகேந்திரன் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் பின்தொடர்ந்து வந்த கார்களை அ.ம.மு.க.வினர் வழிமறித்தனர். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டதுடன் சிறிது நேரத்தில் கைகலப்பாக மாறியது. இதையடுத்து அவர்கள் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கினர். கார்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது.

இதில் அ.தி.மு.க. நிர்வாகி தினேஷ் குமார் படுகாயம் அடைந்தார். மேலும் அபினேஷ், விஷ்ணு ஆகியோர் லேசான காயம் அடைந்தனர். உடனடியாக உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர்களை ஆர்.பி.உதயகுமார் நேரில் சந்தித்து நடந்த சம்பவங்களை கேட்டறிந்தார். உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என்று மருத்துவர்களிடம் கேட்டுக் கொண்டார்.

பேரையூர் துணை போலீஸ் சூப்பிரண்டு துர்காதேவி, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார். இதையடுத்து தினேஷ்குமார் கொடுத்த புகாரின் பேரில் அ.ம. மு.க.வை சேர்ந்த 6 பேர் மீது 5 பிரிவுகளில் சேடப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

உசிலம்பட்டி அருகே முன்னாள் அமைச் சர் ஆர்.பி.உதயகுமார் ஆதரவாளர்கள் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதல் சம்பவம் அ.தி.மு.க., அ.ம.மு.க.வினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக ஆர்.பி.உதயகுமார் மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு கொடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

அ.தி.மு.க. சார்பில் ஒன்றியம் மற்றும் ஊராட்சிகள் அளவில் செயல் வீரர்கள், வீராங்கனைகள் கூட்டம் நடத்தி வருகிறோம். இதனால் பொதுமக்கள் மத்தியில் அ.தி.மு.கவிற்கு ஏற்பட்டுள்ள எழுச்சியை பொறுத்துகொள்ள முடியாமல் மேற்படி நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து அதில் பங்கேற்று நடத்திவரும் என்மீது தனிப்பட்ட முறையில் காழ்ப்புணர்ச்சியோடு தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.

நேற்று 10.11.2024 அன்று மாலை 7 மணியளவில் உசிலம்பட்டி தொகுதி சேடபட்டி ஒன்றியத்தில் கழக செயல்வீரர்கள், வீராங்கனைகள் கூட்டம் நடத்தி முடித்துவிட்டு பேரையூர் செல்வதற்காக மங்கல்ரேவு, அத்திபட்டி விலக்கு அருகே வாகனங்களில் சென்று கொண்டிருந்தேன்.

அப்போது அப்பகுதியை சேர்ந்த அ.ம.மு.க கட்சியை சேர்ந்த அடையாளம் தெரிந்த ஊர் பெயர் தெரியாத 10-க்கும் மேற்பட்ட நபர்கள் கழக நிர்வாகிகளை வழிமறித்து அசிங்கமாக பேசினார்கள். நான் எனது வாகனத்தில் கடந்து வந்து விட்டபிறகு எனக்கு பின்னால் வந்த வாகனத்தை வழிமறித்து கையில் இரும்பு கம்பி, கட்டையுடன் தாக்கி வாகனத்தில் இருந்த நபரை கம்பியால் அடித்து தலையில் கடுமையான ரத்தக் காயம் ஏற்படுத்தியுள்ளனர். இது குறித்து சேடபட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

கொலைவெறி தாக்குதல் நடத்தி உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள அ.ம.மு.க. கட்சியினர் மீது சட்ட நடவடிக்கை எடுத்து தொடர்ந்து கழகப்பணி மற்றும் மக்கள் பணியாற்றி வரும் எனக்கும் கழக நிர்வாகிகளுக்கும், கழக நிகழ்ச்சிகளுக்கும், பொது நிகழ்ச்சிகளுக்கும் தகுந்த பாதுகாப்பு வழங்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

Tags:    

Similar News