ஆந்திர தம்பதியிடம் ரூ.60 லட்சம் பறிப்பு- மர்ம நபர்கள் துணிகரம்
- தம்பதியான இருவரும் நகை வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார்கள்.
- தம்பதி நகை வாங்க பணத்துடன் வருவதை நோட்டமிட்டு மர்ம நபர்கள் கைவரிசை காட்டி உள்ளனர்.
பெரம்பூர்:
ஆந்திரா, குண்டூர் பகுதியை சேர்ந்தவர்கள் சுப்பாராவ், லட்சுமி. தம்பதியான இருவரும் நகை வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார்கள். அவர்கள் சென்னை என்.எஸ்.சி. போஸ் சாலையில் உள்ள நகைக்கடையில் நகை வாங்கிச்செல்வது வழக்கம்.
இதேபோல் இன்று காலை தம்பதி சுப்பாராவ்-லட்சுமி இருவரும் நகை வாங்குவதற்காக ரூ.60 லட்சத்துடன் பஸ் மூலம் மாதவரம் பஸ் நிலையத்துக்கு வந்தனர். பின்னர் அவர்கள் ஆட்டோ மூலம் கொருக்குப்பேட்டை, மீனாம்பாள் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் இடைத்தரகர் ஒருவரை பார்ப்பதற்காக வந்தனர். அப்போது ஆட்டோவை பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் திடீரென சுப்பாராவ்-லட்சுமி தம்பதியை வழிமறித்தனர். அவர்களிடம் நகை வாங்குவது தொடர்பாக பேச்சு கொடுத்தனர். கண் இமைக்கும் நேரத்தில் மர்ம நபர்கள் சுப்பாராவ்-லட்சுமி ஆகியோர் வைத்திருந்த ரூ.60 லட்சத்தை பறித்து விட்டு தப்பி சென்று விட்டனர்.
இதனால் தம்பதியினர் இருவரும் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து ஆர்.கே. நகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கொள்ளையர்கள் ரூ.60 லட்சத்தை பறித்து சென்றதால் தம்பதியினர் அதிர்ச்சியில் உள்ளனர். அவர்கள் கொள்ளை தொடர்பாக மாறி மாறி போலீசாரிடம் கூறி வருகிறார்கள். இதனால் போலீசார் குழப்பம் அடைந்து உள்ளனர். அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.
தம்பதி நகை வாங்க பணத்துடன் வருவதை நோட்டமிட்டு மர்ம நபர்கள் கைவரிசை காட்டி உள்ளனர். அவர்கள் மாதவரத்தில் இறங்கி ஆட்டோவில் வந்தது வரை கொள்ளையர்கள் பின்தொடர்ந்து வந்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இதையடுத்து மாதவரம் பஸ்நிலைய பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்ய போலீசார் திட்டமிட்டு வருகிறார்கள். தம்பதியிடம் ரூ.60 லட்சம் பறிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்பு இதேபோல் சென்னை பாரிமுனையில் ஆந்திரா நகை வியாபாரிகளிடமும் லட்சக்கணக்கில் பணம் பறிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.