தஞ்சை ரெயில் நிலையத்தில் காட்சி பொருளாக மாறிய ரூ.1 குடிநீர் திட்ட எந்திரம்
- இந்த எந்திரங்களில் ரூ.5 நாணயம் செலுத்தினால் 1 லிட்டர் தண்ணீர் பிடித்துக்கொள்ளலாம்.
- ஒரு ரூபாய்க்கு குடிநீர் வழங்கும் திட்டம் அமலில் இருந்தபோது பயணிகள் தண்ணீருக்காக செலவு செய்யும் தொகை குறைவாகவே இருந்தது.
தஞ்சாவூர்:
இந்தியாவில் ரெயில் போக்குவரத்திற்கு என்று தனி இடம் உண்டு. ரெயிலில் பயணம் செய்வோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறைந்த கட்டணத்தில் நீண்ட நேரம் பயணம் செய்யலாம் என்பதாலும் அசதியாக இருக்காது என்பதாலும் பெரும்பாலான மக்கள் ரெயில் போக்குவரத்தையே விரும்புகின்றனர். இதனால் ரெயில் நிலையங்களில் பயணிகளுக்கான அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகிறது. இலவச வைபை வசதி, நகரும் படிக்கட்டு என்பது உள்ளிட்ட பல்வேறு கூடுதல் வசதிகளை ரெயில்வே நிர்வாகம் செய்துள்ளது.
அந்த வகையில் ஐ.ஆர்.சி.டி.சி.யுடன் இணைந்து ரெயில் நிலையங்களில் ஒரு ரூபாய்க்கு குடிநீர் வழங்கும் திட்டத்தை ரயில்வே நிர்வாகம் தொடங்கியது. இந்தத் திட்ட மூலம் ஒரு ரூபாய்க்கு சுத்தமான 300 மி.லி. குடிநீர், ரூ.5-க்கு ஒரு லிட்டர் குடிநீர் வழங்கி வந்தது. கடந்த 2016-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட இந்த திட்டத்திற்கு பயணிகளிடையே பெரும் வரவேற்பு இருந்தது.
தமிழகத்தில் தஞ்சாவூர், திருச்சி, சென்னை ,மதுரை உள்ளிட்ட பல்வேறு முக்கிய ரயில் நிலையங்களில் இந்தத் திட்டம் அமலில் இருந்தது.
இதில் குடிநீரை சுத்திகரித்து வழங்கும் எந்திரங்கள் நடைமேடையில் முன்பதிவு இல்லாத பெட்டிகள் நிற்கும் இடத்தின் அருகே நிறுவப்பட்டு உள்ளது.
தஞ்சை ரயில் நிலையத்தில் இரண்டு இடங்களில் இந்த எந்திரங்கள் நிறுவப்பட்டு உள்ளது. இந்த எந்திரங்களில் ரூ.1 நாணயம் செலுத்தினால் 300 மி.லி. தண்ணீர் பிடித்துக் கொள்ளலாம். அதேபோல் ரூ.5 நாணயம் செலுத்தி
1 லிட்டர் தண்ணீர் பிடிக்கலாம்.
குறைந்த விலைக்கு தண்ணீர் கிடைத்ததால் பயணிகள் மத்தியில் வரவேற்பு இருந்தது. ஆனால் கடந்த 3 ஆண்டுகளாக இந்தத் திட்டம் செயல்படாமல் முடங்கியது. இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். வேறு வழியின்றி கூடுதல் விலை கொடுத்து தண்ணீர் பாட்டில் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இது குறித்து பயணிகள் தரப்பில் கூறும் போது:-
தஞ்சை ரெயில் நிலையத்தில் ஒரு ரூபாய்க்கு குடிநீர் வழங்கும் திட்டம் அமலில் இருந்தபோது பயணிகளுக்கு தண்ணீருக்காக செலவு செய்யும் தொகை குறைவாக இருந்தது. எந்திரத்தில் ரூ.1 நாணயம் செலுத்தி தண்ணீர் பிடித்து பயன்படுத்தி வந்தோம். மேலும் குளிர்ச்சியான நீரும் வழங்கப்பட்டதால் கோடை காலங்களில் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. ஆனால் கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த திட்டம் செயல்படாமல் உள்ளது. இதனால் தஞ்சை ரயில் நிலையத்தில் குடிநீர் திட்ட எந்திரம் காட்சி பொருளாக மாறி உள்ளது. பயணியிலேயே வரவேற்பை பெற்றிருந்த இந்த திட்டம் முடங்கியது வேதனை அளிக்கிறது. எனவே காலம் தாமதிக்காமல் மீண்டும் ஒரு ரூபாய் குடிநீர் திட்டத்தை செயல்படுத்த ரயில்வே நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.