திருவேங்கடம் பகுதியில் விதை விற்பனை நிலையங்களில் விதை ஆய்வாளர்கள் திடீர் ஆய்வு
- விதை ஆய்வு துணை இயக்குனர் ராஜ்குமார் தலைமையில் விதை விற்பனை நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.
- விற்பனை நிலையங்களில் இருந்து விதை மாதிரி எடுக்கப்பட்டு ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
நெல்லை:
2022-23 பிசான பருவத்தில் விவசாயிகளுக்கு விற்பனை செய்ய தென்காசி மாவட்டம் திருவேங்கடம் பகுதி விதை விற்பனை நிலையங்களில் மக்காச்சோளம் மற்றும் பருத்தி விதைகள் வரப்பெற்றுள்ளது.
வள்ளியூர் விதை ஆய்வாளர் பாலசுப்பிரமணியன், நெல்லை விதை ஆய்வாளர் ஜெயசுதா, தென்காசி விதை ஆய்வாளர் சண்முகையா, நாகர்கோவில் விதை ஆய்வாளர் கோமதி மற்றும் சங்கரன்கோவில் விதை ஆய்வாளர் விஜயலட்சுமி உள்ளிட்ட குழுவினர் விதை ஆய்வு துணை இயக்குனர் ராஜ்குமார் தலைமையில் திருவேங்கடம், கலிங்கப்பட்டி, குலசேகரப்பேரி, ஆலமநாயக்கர்பட்டி, அ.கரிசல்குளம் மற்றும் மைப்பாறை பகுதியில் உள்ள 14 விதை விற்பனை நிலையங்களில் கடந்த 12-ந்தேதி திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வின்போது விதை கொள்முதல் பட்டியல், ரகம், பதிவுச்சான்று மற்றும் குவியல் முளைப்புத்திறன் பரிசோதனை அறிக்கை ஆகியன சரிபார்க்கப்பட்டது. மேற்படி ஆவணங்கள் பெறப்படாத ரூ.12,19,000 மதிப்பிலான 19 மக்காச்சோளம் விதைகள் மற்றும் பருத்தி விதை குவியல்களுக்கு விற்பனை தடை விதிக்கப்பட்டது. மேலும் விற்பனை நிலையங்களில் இருந்து 127 மக்காச்சோளம் மற்றும் பருத்தி விதைகளில் அலுவலக விதை மாதிரி எடுக்கப்பட்டு முளைப்புத்திறன் பரிசோதனைக்காக ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் உரிமம் பெற்ற விதை விற்பனை நிலையங்களில் விதை ரகம், காலாவதி நாள், பயிரிட ஏற்ற பருவம் ஆகிய விபரங்களை விதை பொட்டலங்களின் விபர அட்டையில் சரிபார்த்து பின், உரிய ரசீது பெற்று, தரமான விதைகளை வாங்கி பயன்பெறுமாறு நெல்லை மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குனர் ராஜ்குமார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.