உள்ளூர் செய்திகள்

சிவகங்கை யூனியன் சக்கந்தியில் மகளிர் சுயஉதவிக்குழு மூலம் தேசியகொடி தயாரிக்கும் பணி நடைபெறுவதை கலெக்டர் மதுசூதன்ரெட்டி பார்வையிட்டு ஆய்வு செய்தார். அருகில் ஊரக வாழ்வாதார திட்ட இயக்குநர் வானதி, உதவி திட்ட அலுவலர் ராஜ்குமார் உள்ளனர்.

தேசியக்கொடி தயாராகும் பணி

Published On 2022-07-31 09:01 GMT   |   Update On 2022-07-31 09:01 GMT
  • மகளிர் சுயஉதவி குழுக்கள் மூலம் தேசியக்கொடி தயாராகும் பணி நடந்து வருகிறது.
  • சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

சிவகங்கை

75-வது சுதந்திர அமுதப்பெருவிழாவை முன்னிட்டு வருகிற 13-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை இல்லந்தோறும் தேசியக்கொடி ஏற்றப்படுகிறது.

இதற்கு தேவையான தேசியக்கொடிகள் தயாரிக்கும் பணிகள் சிவகங்கை ஊராட்சி ஒன்றியம், சக்கந்தியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இய–க்கத்தின் சார்பில், வட்டார அளவிலான மகளிர் சுயஉதவிக்குழு கூட்டமைப்பின் மூலம் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது கலெக்டர் கூறுகையில், இந்தியா சுதந்திரமடைந்து 75-வது ஆண்டை முன்னிட்டு, சுதந்திர தினவிழா, "சுதந்திர தின அமுதப்பெருவிழாவாக'' கொண்டாடப்படுகிறது.

அதையொட்டி வீடுகள் தோறும் தேசியக்கொடியினை ஏற்றி வருகிற 13-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை கொண்டாட அரசு அறிவுறுத்தி உள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில், வட்டார அளவிலான மகளிர் சுயஉதவிக்குழு கூட்டமைப்பின் மூலம் தேசியக்கொடி தயாரித்து பொதுமக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

36 மகளிர் சுயஉதவி குழுக்கள் மூலம் 359 மின் மோட்டார் தையல் எந்திரங்கள் மூலம் ஊரகப்பகுதிகளுக்கு 4 லட்சம் தேசியக்கொடிகளும், நகராட்சிப் பகுதிகளுக்கு 1 லட்சம் தேசியக்கொடிகளும் என மொத்தம் 5 லட்சம் தேசியக்கொடிகள் தயாரித்து வழங்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஊரகப்பகுதிகளில் உள்ளவர்களுக்கு உள்ளாட்சி மன்ற நிர்வாகத்தின் மூலமாகவும், நகராட்சி, பேரூராட்சி பகுதி குடியிருப்பு வாசிகளுக்கு சம்பந்தப்பட்ட பேரூராட்சி, நகராட்சி அலுவலக மூலமாகவும் தேசியக்கொடிகள் விநியோகிக்கப்பட உள்ளது.

தேசியக்கொடியின் மீது எந்த வாசகமும் இடம்பெறாமல் தூய்மையான முழு அளவில் உள்ள கொடிகளை ஏற்ற வேண்டும். 15-ந் தேதிக்கு பிறகு தேசியக்கொடியினை பத்திரமாக பாதுகாக்க வேண்டும். கீழே எறியவோ, வேறு எந்தப்பயன்பாட்டிற்கோ பயன்படுத்தக்கூடாது.

இவ்வாறு கலெக்டர் கூறினார்.

Tags:    

Similar News