ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள்; 20 வீரர்கள் காயம்
- மானாமதுரை அருகே நடந்த ஜல்லிக்கட்டில் காளைகள் சீறிப்பாய்ந்ததில் 20 வீரர்கள் காயமடைந்தனர்.
- ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரைஅருகே உள்ள பெரும்பச்சேரி சமய கருப்பணசுவாமி கோவில் திருவிழாவை முன்னிட்டு மேட்டுமடை, பெரும்பச்சேரி கிராம மக்கள் சார்பில் ஜல்லிக்கட்டு நடந்தது.
சமய கருப்பணசுவாமி கோவிலில் பூஜைகள் நடத்தி ஜல்லிக்கட்டு தொடங்கி வைக்கப்பட்டது. சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, விருதுநகர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட
400-க்கும் மேற்பட்ட காளைகள் ஜல்லிக்கட்டில் வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டன.
பல பகுதிகளில் இருந்தும் வந்திருந்த மாடுபிடி வீரர்கள் சீறிப்பாய்ந்த காளைகளை அடக்கினர். காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் கட்டில், சேர், சில்வர் அண்டா, சைக்கிள், வெள்ளிக்காசு உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் பரிசாக வழங்கப்பட்டது.
ஜல்லிக்கட்டில் களத்தில் நின்று சிறப்பாக களமாடிய சிறந்த காளைகளுக்கும், அதிக காளைகளை பிடித்த வீரர்களுக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.இதில் காளைகளை அடக்க முயன்ற 20 வீரர்கள் காயமடைந்தனர்.
மானாமதுரை வட்டாட்சியர் ராஜா மேற்பார்வையில் நடந்த இந்த ஜல்லிக்கட்டில் காவல்துறை கண்காணிப்பாளர் கண்ணன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.