இரட்டை கொலையில் குற்றவாளிகள் அடையாளம் தெரிந்தது
- இரட்டை கொலையில் குற்றவாளிகள் அடையாளம் தெரிந்ததாக டி.ஐ.ஜி தெரிவித்துள்ளார்.
- தங்க நகைகளையும் பறிமுதல் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர் என்றார்.
தேவகோட்டை
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே கண்ணங்கோட்டை கிராமத்தில் கடந்த ஜனவரி மாதம் 11-ந் தேதி அதிகாலையில் தாய் மகளை கொலை செய்து 60 தங்க நகைகளை கொள்ளை அடித்துச் சென்றனர். பேரன் மூவரசனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டி.ஐ.ஜி. துரை சம்பவம் நடந்த நாளிலிருந்து தேவகோட்டை பகுதிகளில் முகாமிட்டு அவரது மேற்பார்வையில் 10 தனி படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.
இதில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்யாததை கண்டித்து சட்ட ஒழுங்கு குழு தலைவர் கேஆர். ராமசாமி, சிவகங்கை எம்.எல்.ஏ. செந்தில்நாதன் தலைமையில் தியாகிகள் பூங்கா அருகே சுமார் 5000க்கும் மேற்பட்டோர் அடையாள உண்ணாவிரதம் இருந்தனர்.
மாவட்ட கண்காணிப்பாளர் செல்வராஜ், காரைக்குடி உதவி கண்காணிப்பாளர் ஸ்டாலின் தலைமையிலான தனி படை பிரிவினர் பல்வேறு கட்ட விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று டி.ஐ.ஜி. துரை சிவகங்கையில் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது கண்ணங்கோட்டையில் இரட்டை கொலை சம்பவம் குறித்து கூறும்போது, குற்றவாளிகளை அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலும் குற்றவாளிகளை கைது செய்து. தங்க நகைகளையும் பறிமுதல் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர் என்றார்.